18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

கடலூர், ஜூன் 15: மணல் குவாரி பிரச்னை குறித்த வழக்கு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். இதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரி தொடர்பாக போடப்பட்ட வழக்கு விசாரணையில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை வரும் 25ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட 40 பேரும் வெற்றி பெற்றது தான் மிகப்பெரிய திருப்புமுனை. இதனால்தான் பாஜக தங்களது சுய பலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. மோடி என்றால் ஒரு விஷ்வ குரு என பாஜக உலக அளவில் கட்டிய பிம்பம் அனைத்தும் தகர்ந்துள்ளது. இன்று மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் மைனாரிட்டி அரசாக மோடி அரசு அமைந்துள்ளது. மேலும் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற 40 பேரும் தமிழ்நாட்டின் உரிமைக்காக எப்போதும் போராடுவார்கள்.

மத்திய அரசு எவ்வளவு காலம் நீடிப்பார்கள் என டெல்லியில் பேசிக்கொள்கிறார்கள். எனவே காலம் பதில் சொல்லும். திமுக அரசு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அரசு பேருந்துகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பணிமனைக்கு கொண்டு சென்று நீக்க வேண்டும். அதனை சிலர் பொழுதுபோக்குக்காக சமூக வலைதளங்களில் தவறாக வதந்தி பரப்புகின்றனர். இந்தியாவிலேயே 20,000 பேருந்துகளை கொண்ட நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இது சிறப்பான சேவையை செய்து வருகிறது. வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கக் கூடாது என்பது விதி. இதற்காக ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது. மீறி இயக்கினால் பேருந்துகள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 7200 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும், என்றார். அப்போது திமுக மாநகர செயலாளர் ராஜா, வழக்கறிஞர் அணி கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: