மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

விருத்தாசலம், ஜூன் 14: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் தணிகைவள்ளி(20). கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜமூர்த்தி மகன் ஜெயக்குமார். இருவரும் தற்போது அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பார்மசி படித்து வருகின்றனர். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே ஏற்பட்ட நட்பு காரணமாக பழகி வந்த நிலையில் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தணிகைவள்ளிக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், கடந்த மாதம் 23ம் தேதி தணிகை வள்ளியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜெயக்குமாரும் தணிகைவள்ளியும் ஒன்றாக இருந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தணிகை வள்ளி, ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23ம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எடுக்கவில்லை என கூறி நேற்று திடீரென காவல் நிலையம் முன் தணிகைவள்ளி தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: