சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வு 1 கிலோ ஐஸ்பர்க் ரூ.430-க்கு விற்பனை

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளாக கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லிமலை ஒரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் குறுகிய கால பயிர்களாக கருதப்படும் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பர்க், செல்லரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் போன்றவைகள் விளைவிக்கப்படுகின்றன.

இந்த வகை காய்கறிகள் நட்சத்திர ஒட்டல்கள் போன்றவற்றில் நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நீலகிாியில் விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதனை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு அனுப்புகின்றனர். இதுமட்டுமின்றி சில வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் துவங்கி ஏப்ரல் இறுதி வரை வரலாறு காணாத அளவிற்கு கொளுத்திய வெயில் காரணமாக விவசாய பணிகள் பாதித்தது.

மே மாத துவக்கத்தில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளை பயிரிட்டனர். தொடர்ந்து மே மாத இரண்டாவது வாரத்தில் இருந்து கொட்டிய கனமழை மற்றும் ஜூன் மாதத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக சைனீஸ் காய்கறிகளில் அழுகல் ஏற்பட்டது. இதன் காரணமாக விளைச்சல் பாதித்த நிலையில் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.20 முதல் 40க்கு விற்பனையாகி வந்த சுகுணி காய் தற்போது ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது.

லெட்யூஸ் ரூ.400க்கும், ரூ.70-100க்கு விறபனையாகி வந்த புரூக்கோலி தற்போது ரூ.250க்கும், சைனீஸ் கேபேஜ் ரூ.50க்கும், செல்லரி ரூ.80 முதல் 100 வரையிலும், லீக்ஸ் ரூ.150, ரெட் கேபேஜ் ரூ.90 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. சீனா, ஜப்பான் உணவு வகைகள் தயாரிக்க பயன்படும் ஐஸ்பர்க் நேற்று ரூ.430க்கு ஏலம் போனது. சாதாரண நாட்களில் ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வானது இம்மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் அதன் பின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சைனீஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வு 1 கிலோ ஐஸ்பர்க் ரூ.430-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: