திருப்பார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வன்

“கவள யானைக் கொம்பொசித்த
கண்ணனென்றும் காமருசீர்க்
குவளை மேக மன்ன மேனி
கொண்ட கோனென்னானை
யென்றும்
தவள மாட நீடு நாங்கைத்
தாமரையால் கேள்வ னென்றும்
பவள வாயாளென் மடந்தை
பார்த்தன் பள்ளி பாடுவாளே’’

– திருமங்கையாழ்வார் பரவசத்துடன் பாடிய பாசுரம் இது. பார்த்தன்பள்ளிப் பெருமாளை அவர் மோகிக்கும் பாங்கு இப்பாடல் மட்டுமல்லாமல், பிற ஒன்பது பாடல்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். தன்னை ஒரு தாயாக பாவித்துக் கொண்டு, தன் மகள் அந்தப் பெருமாளை எண்ணி ஏங்குவதாகவும், போற்றிப் புகழ்வதாகவும், இத்தல மங்களாசாசனப் பாடல்களை அமைத்திருக்கிறார் ஆழ்வார். அவரைப் பொறுத்தவரை இந்தப் பெருமாள், சாட்சாத் கண்ணனே! யானையாக வந்த அரக்கனின் கொம்பை உடைத்து அவனை அடக்கியவன், குவளை மலர் போன்ற விழிகளை உடையவன், மேகம் போன்ற வண்ணம் கொண்டவன்,உலகைக் காக்கும் மன்னவன், யானை போன்ற கம்பீரம் கொண்டவன், பார்த்தன்பள்ளி என்ற திருத்தலத்தில் உறையும் கோமான் என்றெல்லாம் இந்தப் பெருமாளை கண்ணனாகவே பாவித்து பாடி மகிழ்கிறார்.

அதுவும், தான் அவ்வாறு போற்றவில்லையாம், ஒரு தாயாகத் தன்னை பாவித்துக் கொண்டு தன் மகள் அவ்வாறு எண்ணி எண்ணி ஏங்கி மறுகுவதாகப் பாடுகிறாள். இப்போதும், ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருமங்கையாழ்வார் இங்கே எழுந்தருளி மங்களாசாசனம் செய்வதாக ஐதீகம். இப்படி திருமங்கையாழ்வார் நெகிழ்ந்து உருகும் இந்தத் திருத்தலம், குறுமுனி அகத்தியராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒன்று. பாரதத்தின் தென்பகுதியில் நிலவி வந்த வறட்சியைப் பார்த்து மனம் வெதும்பினார் அகத்தியர். ‘என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’, என்றும், ‘தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்’ என்றும் கம்பர் பெருமானால் போற்றப்படும் அகத்தியருக்கு, தான் பேரன்பு கொண்ட தன் தென்பகுதி வளமடைய வேண்டுமே என்ற ஏக்கம் இருந்ததும் நியாயம்தானே! அந்தப் பகுதியின் துயர் துடைக்கும் ஆர்வத்தில், அதற்கு ஒரு வழி காட்ட வேண்டுமென்று அவர் சிவபெருமானிடம் மன்றாடினார். மகாதேவனும் அவரிடம் காவிரி நதியை ஒரு கமண்டலத்தில் அடைத்து, கொடுத்து அனுப்பினார். இந்த நதியை எப்படி அங்கே பிரவாகமெடுக்க வைப்பது என்ற யோசனை அகத்தியருக்கு.

ஈசனோ, ‘கவலைப் படாதே. என் மகன் விநாயகன் அந்தப் பொறுப்பை மேற்கொள்வான்’ என்று சொல்லி ஆறுதலளித்தார். அதன்படியே தென்னாட்டின் குடகு பகுதிக்கு அகத்தியர் வந்தபோது ஆனைமுகன், காகம் வடிவெடுத்து அந்தக் கமண்டலத்தைத் தட்டிவிட, காவிரி வெள்ளமாய்ப் பொங்கிப் பெருகி ஓடியது. இந்த சம்பவத்தை, ‘எண்திசையும், ஏழ்உலகும் எவ்வுயிரும் உய்யக் குண்டிகையினில் பொருவுஇவ் காவிரி கொணர்ந்தான்,’ என்று கம்பர், தென்பகுதியில் காவிரி பாயக் காரணமானவர் அகத்தியரே என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார். சரி, காவிரியைப் பாயவிட்டாயிற்று. அது, தான் செல்லும் பகுதிகளுக்கெல்லாம் எப்படி வளம் சேர்க்கிறது என்று பார்க்க வேண்டாமா? அந்த எண்ணத்தால்தான் அகத்தியர் காவிரி பிரவகிக்கும் பகுதிகளுக்குச் சென்று அதன் அருட்கொடையால் அந்தப் பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று விளங்கி, அங்கே வாழும் மக்கள், மாக்கள் எல்லாம் நிறைவான வாழ்வை மேற்கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார்.

இதற்கு மூலகாரணமாக விளங்கிய கயிலைநாதனுக்கு அவ்வாறு, தான் போகும் இடங்களிலெல்லாம் லிங்கம் ஸ்தாபித்து கோயிலையும் உருவாக்கினார். அந்த லிங்கங்கள் அகஸ்தீஸ்வரர் என்றே அழைக்கப்படலாயின. இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்ற அகத்தியர், இந்த பார்த்தன்பள்ளிக்கு வந்தபோது அப்படியே மெய்மறந்து நின்றுவிட்டார். காவிரி தந்த செழிப்பு இங்கே பரிபூரணமாக நிலவுவதைக் கண்ட அவர், தென்பகுதிக்குத் தான் காவிரி கொண்டு வந்ததன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டதாகவே கருதினார். அதனால் அவர் இத்தலத்தையே தம் வாழ்விடமாகக் கொண்டார். இவ்வாறு இங்கேயே தங்கி, இந்த இயற்கைச் சூழலில் லயித்துவிட்ட அகத்தியருக்கும் ஒரு சோதனை வந்தது. அந்த சோதனையை உருவாக்கியவன் பார்த்தன் என்று சொல்லப்படும் அர்ஜுனன். குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, பீமன், அர்ஜுனன் இருவரும் பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்றார்கள். அவ்வாறு அர்ஜுனன் இந்தத் தலத்திற்கு வந்தபோது தொண்டை வரள, தாகத்தால் தவித்தான்.

பல இடங்களுக்கு அலைந்து திரிந்தபோதும் அவன் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கவில்லை. இறுதியாக அவன் அகத்தியரை சந்தித்தான். தென்பகுதிக்கே காவிரி நதியால் வளம் சேர்த்த அவரிடம், தன் தாகம் தீர்க்குமாறு கேட்டுக்கொண்டான். முனிவரும் உற்சாகத்தோடு தன் கமண்டலத்தைக் காட்ட, அதனுள் எட்டிப் பார்த்த அர்ஜுனன் திகைத்தான்! ஆமாம், கமண்டலமும் வறண்டிருந்தது! அர்ஜுனனோடு, அகத்தியரும் ஏமாற்றத்தால் தாக்குண்டபோது, முனிவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. தன்னுடைய உயிர்த் துணைவனான கிருஷ்ணனை நோக்கி குடிநீர் கோருவதை விட்டுவிட்டு, தன்னிடம் அவன் கோரியதன் விளைவு அது என்று புன்னகையுடன் புரிந்துகொண்டார். அதை அர்ஜுனனிடமும் அவர் சொன்னார்: ‘‘ஏன் எங்கெங்கோ அலைகிறாய், அர்ஜுனா? மாதவனை அழைத்தால் உன் மா தாகம் தீராதா?’’உடனே, தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், கிருஷ்ணனை மனம் பொங்கி அழைக்க, அங்கே அவரும் பிரத்யட்சமானார். தன்னிடம் இருந்த ஒரு கத்தியை அவர் அர்ஜுனனிடம் கொடுத்து, ‘அதனால் நிலத்தைக் கீறிப் பார்,’ என்று உத்தரவிட்டார்.

அதன்படியே அர்ஜுனன் செய்ய, உடனே நிலத்திலிருந்து நீர் பீறிட்டுப் பாய்ந்தது. பார்த்தன் தாகம் தணிந்தான். அப்போது ஏற்பட்ட நீர்நிலை கட்க தீர்த்தம் என்றழைக்கப்பட்டது. அதாவது கட்கத்தால் (வாளால்) உருவான தீர்த்தம்! இப்போதும் இத்தலப் பெருமான் இடையில் கத்தியுடன் விளங்குவதைக் காணலாம். இந்தக் கோயிலில் அர்ஜுனனுக்குத் தனி சந்நதி அமைந்திருப்பது விசேஷமானது. நின்ற கோலத்தில், முகத்தை மீசை அலங்கரிக்க, தன் இடுப்பில் ஒரு கத்தியை செருகியபடி, துளசி மாலை அணிந்து, கூப்பிய திருக்கரங்களுடன் அர்ஜுனன் காட்சி அளிக்கிறான். இங்கே நீர்த்தாகத்தை அர்ஜுனனுக்குத் தீர்த்த எம்பெருமான், குருக்ஷேத்திர யுத்த களத்தில், அபிரி மிதமான அவனுடைய குழப்பங்களை நிவர்த்தி செய்து அவனுடைய வெற்றி தாகத்தையும் தீர்த்து வைத்தவர்.

அதனாலேயே சென்னை, திருவல்லிக்கேணி திவ்யதேசத்து பார்த்தசாரதியே இவர் என்று சொல்வாரும் உண்டு. ஆனால் இரு தோற்றங்களுக்கும் வித்தியாசம் உண்டு. திருவல்லிக்கேணியில் பெருமாள் பார்த்தசாரதியாக, முகத்தில் மீசையுடன், வீரமும், கம்பீரமும் பொலிய, திகழ்கிறார். அங்கே அவருக்கு இரண்டு கரங்கள். வழக்கமாக சக்கரம் தாங்கும் வலக்கை, சங்கைத் தாங்கியிருக்கிறது; இடதுகரம் தன் திருவடியைக் காட்டி சரணாகதி தத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால் இந்த திருப்பார்த்தன்பள்ளி தலத்தில், பரந்தாமன் நான்கு கரங்களுடன், சங்கு – சக்கரம் தாங்கி விளங்குகிறார். முகத்தில் அச்சுறுத்தும் மீசைக்கு பதிலாக மந்தஹாசம் தவழ்கிறது. பார்த்தனின் தாகத்தை மட்டுமல்ல; எந்த ஒரு பக்தனின் ஆன்ம தாகத்தையும் தீர்க்கவல்லவராய் அவர் விளங்குகிறார்.

பெயருங் கருங்கடலே நோக்குமாறு ஒன்பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்குமொண்
டாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

– என்று பொய்கையாழ்வார் இந்தப் பெருமாளைப் பாடியிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் பார்த்தன்பள்ளி என்று இத்தலப் பெயரை அவர் குறிப்பிடாததால், இத்தலத்தின் மீதான பொய்கையாழ்வாரின் மங்களாசாசனம் இது இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனால் இத்தல பிராட்டியை இவர் குறிப்பிடுவதிலிருந்து இந்தத் தலத்திற்கு ஆழ்வார் விஜயம் செய்திருக்கிறார், இப்பெருமாளைப் பாடியிருக்கிறார் என்று கருதவும் இடம் இருக்கிறது. மூலவர், உற்சவர் இருவருமே ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று தேவியர் சமேதராகக் காட்சி யளிக்கிறார்கள். ஒருவேளை கிருஷ்ணனே ‘தாமரையாள் கேள்வன்’ என்பதால் இப்படி சகியர் புடைசூழ திருக்கோலம் காட்டுகிறாரோ! இந்த மூலவரின் பெயரும், தன் தேவியை முன்னிருத்தி, ‘தாமரையாள் கேள்வன்’ என்றிருப்பதிலிருந்தும் இந்த நயம் விளங்கும்.

வேறு எந்த திவ்ய தேசத்திலும் இப்படி ஒரு கோலத்தை பெருமாள் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திருக்கோயிலில் இன்னொரு விசேஷம், கோலவில்லி ராமர். இவர் சந்நதி, பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; குழப்பமாகத் திகைக்கவும் வைக்கும். ஆமாம், ‘இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்ற இந்த கற்புநிறைச் செல்வன், இந்த சந்நதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார்! இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன?இந்தக் கோலம், திருமால் தசரத சக்கரவர்த்திக்குக் காட்டிய கோலம்! புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்ட தசரதன், தனக்குத் திருமாலைப் போன்ற ஒரு மகன் வந்துதிக்க மாட்டானா என்று ஏங்கினான்.

அவன் ஏக்கத்தைப் போக்கும் வகையில், வில், அம்புடன் ஸ்ரீ ராமனாக அவன் முன் காட்சி தந்தார், திருமால். ஆனால், கூடவே திருமாலை விட்டு என்றும் அகலாத ஸ்ரீ தேவி, பூதேவியும் உடனிருந்தார்கள். இந்தத் தோற்றம்தான் இப்போது நமக்கும் காணக்கிடைக்கிறது! இந்த கோலவில்லி ராமர் மூலவருக்குத் தனியே ஒரு கோயில் இருக்கிறது. பார்த்தன்பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு தோப்பில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். தனி சந்நதியில் தாமரை நாயகியாகத் தாயார் கொலுவிருந்து பேரருள் புரிகிறாள். பரமேஸ்வரனின் பிரம்மஹத்தை தோஷத்தைப் போக்கி அருளிய திருநாங்கூர் பதினொரு திவ்யத் திருத்தலங்களில் பார்த்தன்பள்ளியும் ஒன்றாகத் திகழ்கிறது.

தியான ஸ்லோகம்

ஸ்ரீ மத் பார்த்த புரே ஹரிஸ்து கமலா நாதச்ச கங்கா ஸரஸ்
தீர்த்தம் திவ்ய விமாந மத்ர ஸுபகம் தத் ச்ராவணம் நாமத:
தேவி தாமரஸாஹ்வயா வருணதிக் ஸம்வீக்ஷமாணோர்ஜுந
ப்ரத்யக்ஷ: கருணாப்தி ரத்ர வருணா பீஷ்டப்ரதாதா நிசம்
ஸ்ரீ விஷ்ணு ஸ்தல தர்சனம்

எப்படிப் போவது: திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பார்த்தன்பள்ளி. ஆட்டோ அல்லது வாடகைக் கார் அமர்த்திக்கொள்ளலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 10 மணிவரையிலும், மாலை 5 முதல் 7 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், ராதாநல்லூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609114.

 

The post திருப்பார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வன் appeared first on Dinakaran.

Related Stories: