குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி?

தெளிவு பெறுஓம்

– சிவா, மதுரை.

பதில்: முன்னோர்களை தவறாமல் நினைக்க வேண்டும் அவர்களுக்கு உரிய வழிபாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே ஒரு குடும்பத்திற்கு அவர்கள் ஆசி தவறாமல் கிடைத்துவிடும் முன்னோர்கள் ஆசி இல்லாமல் தெய்வத்தின் அருள் கிடைப்பது கூட கடினம் என்பதால்தான் பல நேரங் களில் நம் வீட்டில் சுபகாரியத் தடைகளோ, காரணம் இல்லாத சங்கடங்களோ வருகின்றபொழுது, முன்னோர்கள் வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்கலாம்; அதை நிவர்த்தி செய்துவிட்டு, பிறகு தெய்வத்தை வணங்குங்கள் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.

? அருளாளர்கள் தமிழைப் போற்றுவதற்கு என்ன காரணம்?
– சதீஷ், தஞ்சாவூர்.

பதில்: தமிழின் வளமை தான் காரணம். சொல் வளம் தான் காரணம். அண்மையில் ஒரு குறிப்பு படித்தேன். தமிழின் ஆற்றலைக் குறித்து வியந்தேன். இலை என்று சிலவற்றை சொல்கிறோம். தழை, புல் என்று சிலவற்றைச் சொல்கிறோம். என்ன வேறுபாடு? என்று சிந்தித்தால் தமிழின் அழகு விளங்கும்.

1. அரசு, வேம்பு, கருவை, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர்.
2. அகத்தி, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவைகளின் இலைகள் இலைகள் எனப்படாமல் ‘கீரை’ ஆகின்றது.
3. மண்ணிலே படர்ந்து கிளைத்து வளரும் கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது.
4. கோரை, அறுகு, வகைத்தாவரங்களின் இலைகள் ‘புல்’ என பெயர் பெறுகின்றன.
5. மலைகளில் உயர்ந்து விளைகின்ற உசிலை போன்ற இலைகளுக்குப் பெயர் ‘தழை’ எனப்படுகிறது.
6. வரகு, நெல், முதலியவற்றின் அகலமற்ற உயரம்குறைந்த பயிர்களின் நீண்ட நெடிய இலைகள் ‘தாள்’ ‘தாழை’ என வழங்கப்படுகிறது.
7. சப்பாத்தி, கள்ளி போன்ற வறண்ட நிலத்தாவர இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’ எனப்படுகிறது. நாணல், கரும்பு ஆகியவற்றின் இலைகள் ‘தோகை’ என்று தமிழ் கூறுகின்றது.
8. தென்னை, கமுகு, பனை முதலிய நெடிதாய் வளர்ந்து உயர்ந்த மரங்களின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படு கின்றன. இந்த அழகையும், ஆழத்தையும் கண்டுதான் அருளாளர்கள் விளக்க முடியாத பேராற்றலான இறைவனை விளக்கும் சக்தி தமிழுக்கு உண்டு என தமிழில் பாடினார்கள்.

? தீபத்தை வாயால் ஊதி அணைக்கலாமா?
– பவானி, சென்னை.

பதில்: தீபத்தை மட்டுமல்ல எரிகின்ற அக்னி எதுவாக இருந்தாலும் அதனை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. நம் எச்சில் அக்னி, ஜுவாலை, விளக்கு தீபம் போன்றவற்றில் படக்
கூடாது. அந்தக் காலத்தில் வீட்டில் சமையல் முடிந்தவுடன் அடுப்பில் எரியும் விறகைக் தணிக்கும் வழிமுறையைக் கவனித்தால் தெரியும்.
ஒவ்வொரு விறகாக வெளியே இழுப்பார்கள் அதன் பிறகு தண்ணீரை அதுவும் சுத்தமான தண்ணீரைத் தெளித்து நெருப்பைக் குளிர வைப்பார்கள். இதில் கூட ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். விளக்கை அணைத்தல் என்பது கூட சொல்வது கிடையாது. விளக்கை குளிரவைத்தல் என்று மங்களமாகச்
சொல்வார்கள்.

? சாப்பிடும்போது எப்படிச் சாப்பிட வேண்டும்?
– பிரவீன்குமார், டெல்லி.

பதில்: நிதானமாக அமர்ந்து சுவைத்து சாப்பிட வேண்டும். அவதியோடோ, அவசரமாகவோ, அலட்சியமாகவோ சாப்பிடக்கூடாது. உணவை வீணடிக்கக் கூடாது. சமைப்பது எப்படி ஒரு கலையோ அதைப்போல சாப்பிடுவதும் ஒரு கலைதான். சில பேர் சாப்பிடுவதைப் பார்ப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். அவர்கள் உணவை எடுப்பதும் அதைச் சிந்தாமல் சிதறாமல் மென்மையாக உண்பதும் ஒரு கலை போலத் தெரியும். சாப்பிடு வதற்கென்று சில நியதிகள் உண்டு. திருமுருக கிருபானந்த வாரியார் உணவு உண்பது குறித்து ஒரு அற்புதமான வார்த்தையைச் சொல்லி இருக்கின்றார். ‘‘பசி வந்த பிறகு சாப்பிடுங்கள்.

பசி அடங்குவதற்கு கொஞ்சம் முன்னாலேயே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்’’ என்றார். அதாவது அரை வயிறுக்குச் சாப்பிட வேண்டும் என்பது பொருள் எப்பொழுதும் அரை வயிறுக்கு உணவும், கால் வயிறுக்கு தண்ணீரும், மீதி கால்வயிறுக்கு ஆகாயமுமாகிய வெற்றிடமும் விட வேண்டும் என்பார்கள். நீங்கள் மிக்சியிலேயே ஒரு அளவுக்கு மேல் போட்டால் அரைக்காதல்லவா, அதைப்போல வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் செரிமானசக்தி கெட்டுவிடும். அதைப்போலவே சாப்பிடும்பொழுது கையை ஊன்றி சாப்பிடக்கூடாது. செருப்புக் காலோடு சாப்பிடக்கூடாது.

வாசலுக்கு நேராக அமர்ந்து சாப்பிடக் கூடாது. சூரிய அஸ்தமன நேரத் திலும் சூரிய உதய நேரத்திலும் சாப்பிடுவது கூடாது. பிறரை உட்கார வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு தராமல் நாம் மட்டும் சாப்பிடக்கூடாது. இப்படி பல விஷயங்கள் சாப்பிடுவதில் உண்டு.

? சாளக்கிராமங்கள் எங்கே கிடைக்கிறது?
– லட்சுமி, திருவனந்தபுரம்.

பதில்: நேபாளத்தில் உள்ள ஊருக்கு சாளக்கிராமம் என்று பெயர். வைணவ 108 திருத்தலங்களில் ஒன்று திருமங்கையாழ்வார் அந்தத் தலத்தைக் குறித்துப் பாசுரம் பாடி இருக்கின்றார். அந்தத் திருத்தலத்தில் ஓடுகின்ற நதிக்கு கண்டகி நதி என்று பெயர். கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய தெய் வீகம் பொருந்திய ஒரு விதமான கல்லுக்கு சாளக்கிராமம் என்று பெயர்.
மிகவும் சக்தி வாய்ந்தது. சாளக்கிராமத்தை வைத்து பூஜைசெய்வது என்பது மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. இந்த சாளக்கிராமத்தின் வடிவம் ரேகைகள் வைத்து, ‘‘இது நரசிம்மர், ராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார்’’ என்று சொல்லிவிடுவார்கள். இப்பொழுது சாளக்கிராமக் கல்லில் போலிகளும் இருக்கின்றன. நன்கு விவரம் அறிந்தவர்களிடம் அசல் சாளக்கிராமத்தை கேட்டுப் பெற வேண்டும்.

?சிலருக்கு ஞானம் உடனடியாகக் கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதிக காலம் ஆகிறது. இந்த வேறுபாடு ஏன்?
– விக்ரம், திருவண்ணாமலை.

பதில்: இப்பொழுது நீங்கள் பொறியியல் துறை படிக்கிறீர்கள் என்று சொன்னால் அதற்கான கால அவகாசம் நான்கு வருடம் அல்லது 5 வருடம் என்று வைத்திருக்கின்றார்கள். நீங்கள் முறையாகப் படித்தால் ஐந்தாவது வருடத்தில் நீங்கள் பொறியாளர் பட்டத்தைப் பெற்று விடலாம். ஆனால் ஞானம் பெறுவது என்பது அப்படி அல்ல. பக்குவப்பட வேண்டும். அந்தப் பக்குவத்திற்கு ஏற்ற கால அவகாசம் வேண்டும். ஸ்ரீ ரமணர் இதற்கு அற்புதமான ஒரு உதாரணம் கூறுகிறார். வெடி மருந்து உடனே பற்றிக்கொள்ளும். நிலக்கரி பற்றிக்கொள்வதற்கு வெகுநேரம் ஆகும். பக்குவப்பட்டவர்கள் ஞானம் பெறுவதற்கும் பக்குவப்படாதவர்கள் ஞானம் அடைய முயற்சி செய்யும் காலத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

?கோயிலில் உள்ள பூக்களை நாம் சொந்த உபயோகத்துக்கு எடுத்து வரலாமா?
– பங்கஜம், கோவை.

பதில்: கோயில் பூக்களை கோயிலுக்குத்தான் வழங்க வேண்டும். அது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது தவறு. இதில் இன்னொரு விஷயமும் சொல்லுகின்றேன். உதாரணமாக தலைக்கு வைத்துக்கொள்வதற்கு பூ வாங்குகின்றோம் அல்லவா, அதை உடனே தலைக்கு வைத்துக் கொள்ளாமல், வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜையில் சுவாமி படத்திற்கு சாத்தி வழிபட்டு விட்டு. அதில் கொஞ்சம் பிரசாதமாக எடுத்து தலையில் வைத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது.

? சுபநிகழ்ச்சிக்கு வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
– சரண்யா, வாணியம்பாடி.

பதில்: விருத்திக்கு என்று சொல்வார்கள். எதுவும் விருத்தி அடைய வேண்டும். திருமணம் நடக்கிறது என்றால் மேற்கொண்டு அவர்கள் சந்ததிகளை விருத்தி செய்து நன் மக்களாக, பெயர் சொல்லும்படி வாழ வேண்டும் இந்தச் சந்ததித் தொடர்பு கெட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாழைமரத்தை வாசலில் கட்டுகின்றார்கள். ‘‘வாழையடி வாழையாக’’ என்று பழமொழியே இருக்கிறது அல்லவா இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. வாழை மரத்தை போல மனிதர்களும் வாழ வேண்டும் என்று உணர்த்துவதற்கும் வாழை மரத்தைக் கட்டுகின்றார்கள்.

வாழையில் உள்ள எந்த பொருளும் ஏதாவது ஒரு வகையில் உபயோகமாகிக் கொண்டே இருக்கும். காயாக இருக்கட்டும், கனியாக இருக்கட்டும், பிஞ்சாக இருக்கட்டும், இலையாக இருக்கட்டும், நாராக இருக்கட்டும், தண்டாக இருக்கட்டும், எதுவுமே வீணாகாது. அதுபோல் நம்முடைய வாழ்நாளும் நம் சக்தியும் வீணாகக் கூடாது. நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். இதற்கு வாழை மரம் ஒரு எடுத்துக்காட்டு.

?வீட்டில் எங்கெங்கே விளக்கேற்றுவது?
– அருள்ஜோதி, சென்னை.

பதில்: குறைந்தபட்சம் பூஜை அறையில் காலையில் மாலையிலும் விளக்கேற்றுங்கள். வாய்ப்பு இருந்தால் வாசலில் கிழக்கு நோக்கி ஒரு விளக்கு ஏற்றுங்கள். அதைப்போல நடுக் கூடத்தில் ஒரு விளக்கு ஏற்றுங்கள். சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றுங்கள்.

? வாழ்வை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
– அம்மு, சென்னை.

பதில்: என்னோடு வாழ்ந்தவர்கள் என்னை எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதை விட, எனக்குப் பின்னால் வரப்போகிறவர்கள் என்னை எப்படி மதிப்பிடப் போகிறார்கள் என்பதைப் பற்றியே அதிகம் கவலைப்பட வேண்டும் வாழ்வின் சிந்தனை எதிர்காலத்தைப் பற்றி அல்ல; எதிர்காலத்தில் வாழ்பவர்களுக்கு நாம் செய்து வைத்திருக்கும் நிரந்தர நன்மை பற்றியதாகவே இருக்க வேண்டும்.

? எதனால் பகவானிடம் இருந்து விலகுகிறோம்?
– கார்த்திக், திண்டிவனம்.

பதில்: மாயையால் பகவானிடம் இருந்து விலகுகின்றோம். மாயை பந்தங்களை ஏற்படுத்துகிறது. அந்த பந்தங்கள் பகவானை விட்டு நம்மை விலக வைக்கிறது. இந்த மாயையை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. ‘‘மம மாமா துரத்தயா” என்று பகவான் கீதையில் சொல்கின்றார். என்னுடைய மாயையை ஞானிகளால் கூட கடக்க முடியாது என்கிறார்.
அப்படியானால் எளிய மனிதர்களான நாம் எப்படிக் கடப்பது என்று கேள்வி எழலாம். சரணடைவதன் மூலமாக அவனே அந்த மாயையை கடக்க வைப்பான். அதற்குத்தான் பக்தி, வழிபாடு, பூஜை எல்லாம்.

? வேதாந்தம் என்று எதற்கு பெயர்?
– ஜெயகுமார், தூத்துக்குடி.

பதில்: உபநிடதங்களுக்கு வேதாந்தம் என்று பெயர். அது ஞானத்தை போதிக்கவே ஏற்பட்டது. ஆத்ம ஞானத்தை போதிப்பதற்காக வேத உபநிடதங்கள் ஏற்பட்டன. ஒரு வேத பாகத்தை நான்காகப் பிரித்தால் நான்காவது உபநிடதம். உபநிடதத்தை ஞான காண்டம் என்று சொல்லுவார்கள். உத்தர மீமாம்சை என்றும் சொல்வார்கள்.

இந்த வேதாந்தம் எப்பொழுது புரியும் என்று கேட்கலாம். மனம் தூய்மையானால் வேதாந்தம் பிடிபடும். இல்லையென்றால் குழப்பிவிடும். அதனால்தான் நம்மாழ்வார் மயர்வற மதிநலம் அருளினன் என்று இறைவனைக் கொண்டாடுகின்றார். சைவத்திலும், ‘‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’’ என்று போற்றுகின்றார்கள். ஞானத்தை தரவல்லவன் அவன்தானே!

? மோட்ச தீபம் என்பது என்ன?
– பூஜா, திருச்சி.

பதில்: இறந்தவர்கள் மோட்சம் அதாவது நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றுவார்கள். அதற்கு மோட்ச தீபம் என்று பெயர். இறந்து போன 30-வது நாளில் சிலர் மோட்ச தீபம் ஏற்று வார்கள். கோயில்களில் தென் வாசல் கோபுரத்தில் ஏற்றுவதுண்டு.

? செல்வம் சேருவதற்கு மகாலட்சுமியைக் குறித்து ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
– செந்தமிழ்செல்வன், கரூர்.

பதில்: இருக்கிறது. மகாலட்சுமியின் இந்த மந்திரத்தை காலையிலும் மாலையிலும் நீங்கள் நம்பிக்கையோடு ஜெபித்தால் ஐஸ்வர்யங்களோடு வாழலாம். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத் ப்ரஸீத்,ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மயே நமஹ!ஆனால் ஒரு விஷயம். மந்திரங்களை ஜெபிப்பதோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது கடுமையாக உழைக்க வேண்டும். உழைக்காதவர்களுக்கு மகாலட்சுமி எந்தப் பொருளையும் வழங்குவது கிடையாது. காரணம் ஒரு பொருளைக் கொடுப்பதற்கு கூட மகாலட்சுமிக்கு ஒரு நியாயம் வேண்டுமல்லவா!

தேஜஸ்வி

 

The post குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி? appeared first on Dinakaran.

Related Stories: