திருத்தேவனார்த்தொகை தெய்வ நாயகன்

காலங்கள் மாற மாற, புராதன வழக்கங்களே மரபு ஒழிந்து, புதுமைக் கோலம் பூணும்போது, ஊர்ப் பெயர்கள் மாறுவதும் தவிர்க்க முடியாததாகவே ஆகிவிடுகிறது. அந்த வகையில் திருத்தேவனார்த்தொகை என்ற காரணப் பெயர், இந்தத் தலத்தைப் பொறுத்தும் மாறியிருக்கிறது. கீழச்சாலை என்று நடுவே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருவேளை மூலவரான தெய்வ நாயகன் கிழக்கு நோக்கி சேவை சாதிப்பதால் இப்பெயர் உருவாகியிருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால், இப்போது இந்தத் தலத்துக்குப் போய் திருத்தேவனார்த்தொகை என்றோ கீழச்சாலை என்றோ கேட்டால், உதட்டைப் பிதுக்கித் தனக்குத் தெரியாது என்பதை பாவனையாகச் சொல்பவர்களையே அதிகம் சந்திக்க முடியும். ஆனால் உற்சவ மூர்த்தியான மாதவப் பெருமாள் நம் சிக்கலைத் தீர்த்து வைப்பார்.

ஆமாம், மாதவப் பெருமாள் கோயில் என்று கேட்டால் உடனே கை காட்டவோ அல்லது இந்தக் கோயிலுக்கே அழைத்துச் செல்லவோ செய்கிறார்கள்.‘தேவரும் வந்து இறஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே’ என்றும், ‘இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்தமலர்ச் சதுர்முகனும் கதிரவனும் சந்திரனும் எந்தை, எமக்கு அருள் என நின்று அருளும் இடம்’ என்றும் திருமங்கையாழ்வார் பாடிப் பரவசப்பட்டதிலிருந்து இந்தத் தலத்துக்கு திருத்தேவனார்தொகை என்ற பெயர்தான் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பது புரிகிறது. அதாவது இந்த திருநாங்கூர் தலத்தில் பதினொரு பெருமாள்களாக அவதரித்திருக்கும் திருமாலை தரிசனம் செய்ய பெருங்கூட்டமாக, ஒரு தொகையாக தேவர்கள் வந்து குழுமியதால் இந்தக் கோயிலின் இருப்பிடம் திருதேவனார்த்தொகை என்று வழங்கப்பட்டிருக்கிறது என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் காரணம் சொல்லப்படுகிறது.

இது மட்டுமல்ல, இந்தத் தலப் புராணப்படி பரந்தாமன், ஸ்ரீ தேவி திருமணத்தைப் பார்க்கவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே கூடியிருக்கிறார்களாம்! அது என்ன கதை?‘போகி’ என்றழைக்கப்பட்ட இந்திரன், அந்த அடைமொழிக்கேற்ப முற்றிலும் போகத்திலேயே திளைத்திருந்தான். மயக்கம் தரும் மதுவும், கிறக்கம் தரும் கன்னியரும் என்றும் தன்னை விட்டு நீங்காதிருப்பதே தனக்குப் பரமசுகம் என்று நினைத்திருந்தான். அதனாலேயே அந்த சுகத்துக்கு ஏதேனும் இடையூறு வந்தால், அவனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. அதைவிட, அந்தக் கிளர்ச்சிச் சூழலைவிட்டு வெளியே வரவே மனமில்லாதிருந்தான் என்றே சொல்லலாம். தேவர்களுக்கே அரசன் என்ற மமதையும் உள்ளே புகுந்துவிட்டதா, பிற எல்லோருமே தான் ஏவலிட்டால், தன் அடிபணிந்து தனக்கு அடிமைத் தொழில் செய்வார்கள் என்றும் எண்ணத் தலைப்பட்டான்.

தலையில் கனம் ஏற ஏற, அது இன்னும் விறைப்பாக நிமிர்ந்து நிற்கிறதே தவிர, பாரம் தாங்காமல் தாழ்வதில்லை என்பது தகுதியற்ற கர்வத்தின் தனிக்குணம். அந்த மதர்ப்புடனேயே, யாருக்குமே கிடைத்திராத ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீதேறி கிறங்கிய கண்களுடனும், உறங்கிய மனதுடனும் வந்து கொண்டிருந்தான் அவன்.அந்த சமயத்தில் அங்கே வந்தார் துர்வாச முனிவர். அவர் கரத்தில் பேரொளியுடன் திகழ்ந்து, பலகாத தூரம் மணம் பரப்பிய அற்புத அருள்மாலை தஞ்சமடைந்திருந்தது. அந்த மாலை அவருக்கு நேரடியாக பரமனும், திருமகளும், அவரது ரிஷித் தன்மையைப் பாராட்டும் வகையில் அன்பளிப்பாக அருளியது. ஒரு முனிவனான தனக்கு அந்த மாலை, ஒரு மகோன்னதமான அங்கீகாரம் என்று துர்வாசர் பெருமை கொண்டார். ஆனால், எல்லாவற்றையும் துறந்துவிட்ட தனக்கு அந்த தெய்வீகப் பிரசாதமே பெரும்சுமைதான் என்பதையும் உணர்ந்தார்.

ஆகவே, அதை அரசர் நிலையில் தகுதி கொண்ட ஒரு கோமகனிடம் சேர்ப்பிக்க எண்ணம் கொண்டார். அதனால் அந்த மன்னன் தன் மக்களுக்கும், ஏன் இந்த உலகத்துக்குமே நன்மைகளைப் பரப் பட்டுமே என்று அவர் விரும்பினார். ஆனால் துரதிருஷ்டவசமாக கோமகனுக்கு பதிலாக ஒரு காமுகனையே அவர் இந்த அன்பளிக்குத் தேர்வு செய்ததுதான் அவர் செய்த பிழை. ஆமாம், அவர் கண்ணில் முதலில் பட்டவன் இந்திரன்தான். பீடுநடை போடும் ஐராவதம் யானை மீது அவன் மிடுக்குடன் வந்த தோரணையை பார்த்து அவர் கண்களில் வியப்பு ஒளிர்ந்தது. தேவர்களுக்கெல்லாம் அரசனாயிற்றே, இந்த மாலையால் அவர்கள் அனைவருக்கும் அவன் பெறற்கரிய பேறுகளைப் பெற்றுத் தரமுடியும் என்றே அவர் கருதினார். அதனால் அவனருகே சென்று அந்த மாலையை ஏற்றுக்கொள்ளும்படி மாலை ஏந்திய இரு கைகளையும் அவன் முன் நீட்டினார். முனிவரைப் பார்த்த இந்திரனுக்கு ஏளனம்.

‘இந்த முனிவர்களுக்கு எங்கே வந்து யாசகம் கேட்பது என்றே விதிமுறையே இல்லை’ என்று போதையில் சலித்துக்கொண்டான். அவர் நீட்டிய மாலையை அவர் தனக்கு சமர்ப்பிக்க விரும்பும் பரிசுப் பொருள் என்று நினைத்தான். ஒரு அரசன், கைநீட்டி அந்த மாலையை ஒரு முனிவரிடமிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் கௌரவக் குறைச்சலான செயல் என்று அவன் கருதினான். புத்தி கெட்டுப் போய் உன்மத்த நிலையில் இருந்தாலும், கௌரவக் குறைச்சலை மட்டும் மனசு எப்படித்தான் அடையாளம் காண்கிறதோ! உடனே இந்திரன் யானையை அடக்க உபயோகப்படும் அங்குசத்தை நீட்டி துர்வாசரின் கரங்களிலிருந்த மாலையை ஒரு கொக்கி போட்டு இழுப்பதுபோல எடுத்துக்கொண்டான். குனிந்து கைநீட்ட விரும்பாத அவனுடைய அகம்பாவம் கண்டு திடுக்கிட்டார் முனிவர். அது மட்டுமல்ல, அந்த மாலையை அவன் அப்படியே ஐராவதத்தின் மத்தகத்தின் மீது போட்டான்.

அதை என்னவோ தீண்டத் தகாத பொருளாக அவன் பாவித்தது முனிவரின் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. அந்த யானையோ, தன் தலைவனுக்குத் தான் சற்றும் சளைத்தவனல்ல என்பதை நிரூபித்தது. ஆமாம், தம் தலை மீது போடப்பட்டிருந்த மாலையைத் தும்பிக்கையால் அப்படியே இழுத்து, அதை மிகவும் அலட்சியமாகப் பார்த்து, பிறகு கீழே போட்டது. அதோடு விட்டிருந்தாலும் பரவயில்லையே! இந்திரன் முனிவரை அவமதித்ததைப் பார்த்துவிட்டதாலோ என்னவோ, தன் பங்குக்குக் கூடுதலாக அவரை அவமதித்து எஜமான விசுவாசத்தைக் காட்ட விரும்பியது போலும்; உடனே கீழே விழுந்த அந்த மாலையை காலால் மிதித்து கர்வமாய் முனிவரைப் பார்த்தது; பெருமையாய் இந்திரனைப் பார்த்தது!அப்படியே பதறிப் போனார் துர்வாசர். இது தனக்கு இழைக்கப்பட்ட அவமானமல்ல, தன்னை மதித்து தனக்கு மாலையை ஆசிர்வாதமாக அருளிய பரந்தாமனுக்கும், மஹாலட்சுமிக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்றே அவர் கருதினார்.

கண்களில் தீப்பொறி பறந்தது; வார்த்தைகளில் தணல் தெறித்தது: ‘‘இந்திரா, உன் ஆணவம் உன் கண்களை மூடிவிட்டது; உன் மனதை இருளடையச் செய்துவிட்டது. இந்த அற்புத மாலையை சிதைத்து, அந்தப் பரந்தாமனுக்கே இழுக்கு உண்டாக்கிவிட்டாய். இந்த செருக்குக்கு முக்கிய காரணம் உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம்தான். அதெல்லாம் இனி அழிந்து போகட்டும். நீ பதவி இழந்து, அனைவராலும் அவமதிக்கப்படுவாய்.’’ அதேபோல இந்திரன் தன் செல்வமெல்லாம் இழந்தான். செல்வாக்கை இழந்தான். பிறர் இகழும் அளவுக்கு மிகவும் சாதாரணனாக மாறினான். எது சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரக்கர்கள் அப்படியே இந்திர லோகத்தை, தேவருலகத்தைக் கைப்பற்றினார்கள். இந்திரனை வெருட்டி, விரட்டினார்கள். தவித்துப் போனான் இந்திரன். சுகத்தையே அனுபவித்து வளர்ந்தவனுக்கு, சின்ன வசதிக் குறைவும் பெரிய துக்கமாகத் தெரிந்தது.

அசுரர்களின் கை ஓங்க ஓங்க, தான் ஒளிந்துதான் வாழவேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான். ஒரு கட்டத்தில் இனியும் தாங்காது என்ற நிலை வந்தபோது, நேராக தேவகுருவான பிரஹஸ்பதியைச் சரணடைந்தான். அவர் அறிவுரைப்படி பிரம்மனை வணங்க, பிரம்மனின் வழிகாட்டல்படி பாற்கடல் பரந்தாமனை சிரம் தாழ்த்திப் பணிந்தான். இந்திரனின் நிலை கண்டு பெரிதும் வருந்தினார் திருமால். அவன் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகள் நிலைகுலைந்து போய்விடாமல் இருக்க, அவனுடைய பழைய அதிகாரத்தை அவர் வழங்க முன்வந்தார். அவனுடைய ஐராவதம் முதலான சொத்துகள் அவனுக்கே திரும்பக் கிடைக்க, பாற்கடல் கடையும் பணியை முடுக்கிவிட்டார். இந்திரனுக்கு ஏற்பட்ட நஷ்டத்திலும், சர்வ உலகமும் நன்மையடைய ஒரு வழி பிறப்பதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.
பாற்கடல் கடையப்பட்டது.

திருமாலின் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்ட பாற்கடலும், தன்வந்திரி பகவான், அமிர்தம், உச்சைஸ்ரவஸ் எனும் வெள்ளைக் குதிரை, கௌஸ்துப மணி, பஞ்ச தருக்கள், காமதேனு, ஐராவதம் யானை, சந்திரன், வாருணி மற்றும் திருமகள் என்று அரிய பெரும் பொருட்களை வாரி வழங்கியது. இதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்த இந்திரன், ஓடோடிச் சென்று திருமகள் காலில் விழுந்து தன் தவறை மன்னிக்குமாறு வேண்டினான். திருமகள் திருமாலைப் பார்க்க, அவர் கண்களால் தம் சம்மதத்தைத் தெரிவித்தார். உடனே தேவி, தன் கையிலிருந்த பாரிஜாத மாலையை இந்திரனுக்கு வழங்கினாள். அதை மிகுந்த பக்தி சிரத்தையோடு பெற்றுக் கொண்ட இந்திரன் தன் கண்களில் அதை ஒற்றிக்கொண்டு, உரிய மரியாதை செலுத்தினான்.அந்த பாரிஜாத மாலை வந்த வேளை, இந்திரன் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றான். மீண்டும் தேவர்களுக்கு அசுரனானான். இதே தருணத்தில் அவனுக்கு அற்புதமான காட்சி ஒன்றையும் காட்டி அருளினார் மஹாவிஷ்ணு.

அது, அவர் திருமகளை மணந்த காட்சிதான். இப்படி ஒரு சம்பவம் நிகழப் போவதை அறிந்த எல்லா தேவர்களும், கடவுளர்களும் அங்கே ஒருங்கே குழுமி அந்த ஆனந்தக் காட்சியைக் கண்டு களித்தனர். அப்படி கூடிய தேவர்கள் கூட்டத்தாலேயே இந்தத் தலம் திருத்தேவனார்த்தொகை என்றழைக்கப்பட்டது. இந்த திவ்யதேசத்தில் எம்பெருமான் தெய்வநாயகனாக அருள்பாலிக்கிறார். மா தவம் இயற்றினாலும் காணற்கரிய இந்தப் பெருமான், எளிய பக்தர்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றும் பொருட்டு, மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் உற்சவராக திருக்காட்சி நல்குகிறார். பாற்கடலிலிருந்து தோன்றியவள் என்பதால், தாயார் மூலவர், கடல் மகள் நாச்சியார் என்றழைக்கப்படுகிறார். தாயார் உற்சவருக்கு மாதவ நாயகி என்றத் திருப்பெயர்.

இந்திரனுக்கு எல்லா வளங்களையும் வழங்கிய பேரன்பு மிக்க இந்தத் தாயார், தம் முன் வந்து நிற்கும் பக்தர் அனைவரது எல்லா நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றி மகிழ்விக்கிறார்.எப்படிப் போவது: சீர்காழி – திருவெண்காடு பாதையில், திருவாலி திருத்தலத்துக்கு மிக அருகில் உள்ளது திருத்தேவனார்தொகை என்ற கீழச்சாலை. ஆட்டோ அல்லது வாடகைக் கார் வைத்துக்கொள்ளலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8.30 முதல் 9.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 6.30 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில், (திருத்தேவனார்தொகை), கீழச்சாலை, அண்ணன்கோயில் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609125.

தியான ஸ்லோகம்

ஸ்ரீ மத் திவ்ய ஸ்பா ஸரஸ்தடபுவி ஸ்ரீ தேவ ப்ருந்தே புரே,
தேவோ தைவத நாயகஸ் ததபலா க்ஷீராப்தி ஜாசோபநே
தீப்த்யா நிர்ஜித பாஸ்கரே து ரமணஸ் தத்வயோம யாநேஸ்தித:
சிஷ்ட ச்ரேஷ்ட வஸிஷ்ட வாஞ்சிதகர: ப்ரத்யங்முகோ பாஸதே.

The post திருத்தேவனார்த்தொகை தெய்வ நாயகன் appeared first on Dinakaran.

Related Stories: