மத்வரின் முதல் சீடர்

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹம்பியில் ஆனேகுந்தி என்னும் இடத்தில், மகான் “ஸ்ரீபத்மநாப தீர்த்தரின்’’ மூலபிருந்தாவனம் அமைந்திருக்கின்றது. அமைதியான இடம். சில்லென்று காற்று. மனம் சஞ்சலம் இல்லாமல் அமைதியாகிறது. ஸ்ரீபத்மநாபதீர்த்தர் மூலபிருந்தாவனம் அமைந்திருக்கின்ற இடத்தை, “நவபிருந்தாவனம்’’ என்று அழைக்கின்றார்கள். காரணம், பத்மநாபதீர்த்தர் மூலபிருந்தாவனத்தையும் சேர்த்து, மொத்தம் ஒன்பது மூலபிருந்தாவனங்கள் இந்த இடத்தில் இருக்கின்றன. அவை: ஸ்ரீபத்மநாப தீர்த்தர், ஸ்ரீகவீந்திர தீர்த்தர், ஸ்ரீவாகீச தீர்த்தர், ஸ்ரீவியாசராஜ தீர்த்தர், ஸ்ரீநிவாச தீர்த்தர், ஸ்ரீராம தீர்த்தர், ஸ்ரீரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீ கோவிந்த ஓடயர்.

இதில், நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் ஸ்ரீபத்மநாப தீர்த்தர், ஜகத் குரு ஸ்ரீமத்வாச்சாரியாரின் நேரடி சீடராவார். அதே போல், ஸ்ரீரகுவர்ய தீர்த்தர், திருக்கோவிலூரில் கம்பீரமாக, மூலபிருந்தாவனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீரகோத்தம தீர்த்தரின் குரு ஆவார். அதே போல், ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், பக்தர்களுக்கு கல்பவிருட்சமாய் அருளும் மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் குரு ஆவார்.

அட.. அட.. இத்தனை பெருமையா..! இந்த நவபிருந்தாவனத்திற்கு! ஒரு நாள்கூட விடாது பூஜைகள், ஆராதனைகள், அர்ச்சனைகள் என பிருந்தாவனத்திற்கு எத்தகைய சாந்நித்தியம் (Power) இருக்கும். அதனால்தான் என்னவோ.. நவபிருந்தாவனத்திற்கு சென்றால் ஒரு விதமான அமைதி மனதிற்கு கிடைக்கின்றது. சரி.. நாம் மகான் ஸ்ரீபத்மநாப தீர்த்தரை பற்றி முக்கியமாக சிலவற்றை அறிந்து கொள்வோம்.

ஸ்ரீபத்மநாப தீர்த்தரின் இயற்பெயர் சோபன பட்டா. அவர் ஒரு புகழ்பெற்ற அத்வைத அறிஞர், திறமையான தர்க்கவாதி. அதுமட்டுமா… வேதம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் மிகுந்த அறிவு கொண்டவர். அவர், பல விவாதங்களில் பங்கேற்று வெற்றி பெற்றவர். ஒரு முறை இவருக்கும், ஸ்ரீமத்வாச்சாரியாருக்கும் கடும் விவாதம் வருகிறது. அதில், மத்வர் வெல்கிறார். ஸ்ரீமத்வாச்சாரியாரிடம் அவர் தோல்வியடைந்ததால், துணிச்சலான ஷோபனா பட்டாவை உலகைத் துறந்து, ஸ்ரீமத்வாச்சார்யாவிடமிருந்து சந்நியாசத்தை (துறவி) ஏற்றுக் கொண்டார். துவைத சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்.

பத்மநாப தீர்த்தரின் கூர்மையான அறிவுத் திறமையை கண்ட மத்வர், தனது முதன்மை சிஷ்யனாக, புதிய தத்துவத்தை (துவைதம்) பரப்புவதற்காக நியமிக்கப்பட்டார். மத்வரால் கொடுத்த பொறுப்புகளை செவ்வனே செய்து முடித்தார். துவைத சித்தாந்தத்தை இந்தியா முழுவதும் பரப்பிய பெரும் பங்கு ஸ்ரீபத்மநாப தீர்த்தருக்கே சாரும். இவர் பிருந்தாவனம் ஆன பிறகு, இவரது சீடர் ஸ்ரீநரஹரி தீர்த்தர் பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கினார்.

இவர் ஏறக்குறைய 15 படைப்புகளை இயற்றி இருக்கிறார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, ஸ்ரீமத்வரின் படைப்புகளின் டிப்பனிகளாகும் (கிரந்ததின் விளக்கவுரை) இருந்தாலும்கூட “நயரத்னாவளி’’, மத்வரின் “விஷ்ணு தத்வ நிர்ணயம்’’, “சத்திரகதிபாவளி’’ (பிரம்ம சூத்திர பாஷ்யத்தைப் பற்றிய ஒரு விவரிப்பு) மற்றும் “சன்னாயரத்னாவளி’’ (அனு வியாக்யானம் பற்றியது) ஆகியவை மிகவும் பிரபலமான படைப்புகள்.

நவபிருந்தாவனத்தில், ஸ்ரீபத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்தை பார்க்கும்போது, ஆனந்தமாக இருக்கிறது. ஏற்கனவே கூறியதைப் போல், மனமானது அமைதியாகிறது. வேண்டியதை வேண்டாமல், இந்த நவபிருந்தாவனத்திற்கு சென்றாலே போதும், நவ மகான்களும் அருள்வார்கள்.தொடர்புக்கு: ஆனந்தாச்சார்யா ஜோஷி 08533-267562 / 9449253155.கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து சுமார் 19 கி.மீ. பயணித்தால் நவபிருந்தாவனத்தை எளிதில் அடைந்துவிடலாம்.

ரா.ரெங்கராஜன்

The post மத்வரின் முதல் சீடர் appeared first on Dinakaran.

Related Stories: