மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்

மணம் என்ற சொல்லுக்கு கூடுதல் என்று ஒரு பொருள் உண்டு. இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். பொதுநிலையில் இது நறுமணத்தைக் குறிக்கிறது. மண்ணுதல் என்ற சொல்லுக்கு நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல் எனப் பல பொருள்கள் உண்டு. சிறப்பான ஒரு விஷயத்திற்கு ‘‘திரு’’ என்கிற அடைமொழி கொடுத்து திருமணம் என்று சொல்லுகின்றோம். ஆணும் பெண்ணும் மகிழ்வதற்காகவும், கலப்பதற்காகவும், இணைந்து இல்லறம் அழகு பெறுவதற்காகவும் செய்யும் சடங்கு திருமணம். இந்தத் திருமணத்தை ஆலயங்களில், தெய்வங்களுக்கும் செய்து பார்த்து, நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தெய்வத் திருமணங்கள் நடைபெறுவதற்கான எத்தனையோ காரணங்களில் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்.

சேர்த்தி உற்சவம்

நம்மை இந்தப் பிறவியில் பெற்ற பெற்றோர்களுக்கு, நாம் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, திருமண வைபவத்தை நடத்தி, அழகு பார்த்து ஆசி பெறுவது போலவே, நம் எல்லோரையும் படைத்த, எல்லோருக்கும் பெற்றோர்களான, (சர்வ லோக மாதா; ச பிதா) தெய்வங்களையும் மாதா பிதாவாகப் பாவித்து, அவர்களுக்கு திருக்கல்யாண உற்சவங்களை நடத்திப் பார்த்து, தெய்வங்களின் பேரருளைப் பெறுகிறோம். அப்படி பெறுவதற்காகவே ஆகம விதிகளில் திருக்கல்யாணம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மணம் என்ற சொல்லுக்கு சேர்தல் என்ற பொருள் உண்டு என்று பார்த்தோம். வைணவத்தில் திருக்கல்யாண உற்சவத்தை சேர்த்தி உற்சவம் என்று சொல்வார்கள். திருவாகிய மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் சேர்தலை திருமண உற்சவம் என்று சொல்வார்கள்.

உலகமெங்கும் நடைபெறும் ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம்

சில ஆலயங்களில் அபூர்வமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் அவ்வப்பொழுது நடைபெறும். ஒரு சில ஆலயங்களில் தினம்தோறும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறும். அப்படி நடைபெறும் ஆலயங்கள் திருமலை, திருச்சானூர்,  காலஹஸ்தி. திருமலை பிரம்மோற்சவத்தை இன்றைக்கும் நாம் தினந்தோறும் காலை 12 மணிக்கு தரிசிக்கலாம். பிரமோற்சவம் முதலிய ஒரு சில காலகட்டங்களில் மட்டும் இந்தத் திருக்கல்யாணம் நடக்காது. திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்நதியில் தினம்தோறும் திருக்கல்யாண உற்சவம் உண்டு. இது தவிர னிவாச திருக்கல்யாண உற்சவத்தை உலகம் எங்கும் வெவ்வேறு ஊர்களிலும் வேண்டு கோளின் பேரில் நடத்துகின்றார்கள்.

திருமணத் தடை நீங்க

இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும், இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும், நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும், ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌பெருமாள் வந்த நிலை பற்றியும், ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும், ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும், எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும், ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும், பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும், பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது. பத்தாம் பாசுரம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், சந்பாவனை (பணம்) வைத்து ஆண்டாள் நாச்சியார் சம்பாவனை என்று வழங்கப்படும். அந்த
பதிகத்தின் முதல் பாட்டு இது.

``வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்’’

இதை விளக்கு வைத்து பக்தி யுடன் ஒரு மண்டலம் பாராயணம் செய்பவர்களுக்கு திருமணதடை நீங்கும்.

கல்யாண திருத்தலங்கள்

அனேகமாக தலபுராணத்தை ஒட்டி பார்வதி பரமேஸ்வரர் திருமண கோலங்கள் வெவ்வேறு வகைகளில் நாம் பார்க்க முடியும். பார்வதி தேவி சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காகவே தவம் இருந்த பல திருத்தலங்கள் உண்டு. அப்படிப்பட்ட திருத்தலங்களிலும் புராண நிகழ்வுகளை ஒட்டி அந்தந்த மாதங்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பல திருத்தலங்களில் சிவபெருமான் பார்வதி தேவியை கரம்பிடிக்கும் அமைப்பில் காட்சி தருவார். சில சிவத்தலங்கள் திருமண தடையை நீக்கும் கல்யாண தலங்களாக கருதப் படுகின்றன. அப்படிப்பட்ட தலங்களில் சில காளஹஸ்தி, மதுரை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி இத்தகைய தலங்களை தரிசிப்பது புண்ணியம். சிவபார்வதி திருமணத்தோடு தொடர்புடைய தலங்களில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளியுள்ளார்.

The post மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: