ஓய்வு உடலுக்கு மட்டுமே; உழைப்பிற்கு அல்ல

ராக்ஃபெல்லர் என்னும் அமெரிக்க தொழிலதிபர். உழைப்பினால் வாழ்வில் முன்னுக்கு வந்தவர். அவர் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது, இருக்கையில் அமர்ந்தபடி சில அலுவல் வேலைகளை செய்தார். அதைக் கண்ட ஒரு இளைஞன் ஆச்சரியத்துடன் ‘‘ஐயா நீங்கள் இவ்வளவு காலம் கடுமையாக உழைத்து இந்த அளவுக்கு செல்வம் சேர்த்துள்ளீர்கள். இனிமேலாவது ஓய்வெடுக்கக் கூடாதா? என்று கேட்டான்.

அதைக் கேட்டு புன்னகைத்த ராக்ஃபெல்லர், ‘‘தம்பி இந்த விமானத்தை விமானி மிக உயரத்துக்கு கொண்டு வந்துவிட்டார். இப்போது எளிதாக பறந்து கொண்டு இருக்கிறது. எனவே விமானத்தை விமானி அணைத்துவிட்டால் என்னாகும்? என்றார். ‘‘பெரும் விபத்து ஏற்படுமே’’ என்றான் வாலிபன். தொடர்ந்து பதிலளித்த ராக்ஃபெல்லர் ‘‘அதுபோல் தான் வாழ்க்கையில் கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இப்போது உழைப்பை நிறுத்தினால், பெரும்நஷ்டம் ஏற்படும். அதோடு உழைப்பு என்பது பொருள் சேர்க்க மட்டுமல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும், மன திருப்திக்கும்தான்’’ என்று சொன்னாராம்.

இறைமக்களே, வாழ்வில் ஓய்வு தேவைதான். ஆனால், சோம்பல் ஆபத்தானது. நமது பணிகளை மனநிறைவோடும், சந்தோஷமாகவும் செய்ய வேண்டும், அதேநேரம், செய்யப்பட்ட பணிகளில் (வளர்ச்சியில்) திருப்தியடைந்துவிடக் கூடாது. இதுபற்றி இறைவேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது.

‘‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’’ (பிரசங்கி 9:10) என்றும், ‘‘ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்’’ (நீதி.12:24) என்றும், ‘‘சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது’’ (நீதி 12:27) என்றும் இறைவேதம் கூறுகிறது. ஆகவே, செய்வதை திருந்த செய்யவும், அதை முழுபெலத்துடன் செய்யவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். உச்சத்தை அடைவது மட்டும் பிரதானமானது அல்ல, அடைந்த உச்சத்தை தக்கவைப்பது அதைவிட பிரதானமானதாகும். ஓய்வு உடலுக்கு மட்டும்தான். அது உழைப்பிற்கு அல்ல என்ற புரிந்துணர்வு எப்போதும் நம் சிந்தனையில் இருக்கட்டும்.

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post ஓய்வு உடலுக்கு மட்டுமே; உழைப்பிற்கு அல்ல appeared first on Dinakaran.

Related Stories: