முதற்படைவீடு

திருப்பம் தரும் திருப்புகழ்!

‘முத்தைத் தரு பத்தித்திருநகை அத்திக்கு இறை’ என்று முதற்பாட்டின் முதல் வரியிலேயே கந்தவேள் கரம்பிடித்த தெய்வயானை அம்மையாரைப் போற்றுகிறது அருணகிரியாரின் திருப்புகழ்.! ‘‘முருகன் தெய்வயானை திருமணக்கோலம்’’ மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் அற்புத மலைத்தலம் தான் திருப்பரங்குன்றம். மதுரைக்கு அருகே ஆறுமுகப் பெருமானின் முதற்படைவீடான திருப் பரங்குன்றமும், நினைவுப்படைவீடான பழமுதிர் சோலையும் அமைந்திருப்பது வேலவன் அடியவர்களுக்கு வியப்பையும் மகிழ்வையும் அளிக்கிறது.

திங்களும் செங்கதிரும் மங்குலும் தங்கும் உயர்
தென்பரம் குன்றில்உறை பெருமாளே!
மதியும் கதிரும் தடவும் படி
உயர்நின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்று பரங்கிரி
வந்தருள் பெருமாளே!
– என்று தலத்தை வாழ்த்தி தமிழ் பொழிகின்றார் அருணகிரியார்.

திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, தேவாரம், திருப்புகழ், திரு வகுப்பு, கந்தபுராணம் என பல நூல்களில் திருப்பரங்குன்றம் பற்றிய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் கருவறை, சிற்பங்கள் அனைத்தும் மலையைக் குடைந்து வடிவமைக்கப் பட்டுள்ளன. எனவே குடவரைக் கோயில் என முதற்படைவீடு திகழ்கிறது. பொதுவாக நின்ற திருக்கோலத்திலேயே கருவறைகளில் காட்சி தரும் கந்தசுவாமி, இம்மலையில் மட்டுமே அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் சொண்டுமுருகர் வடக்கு நோக்கி உட்கார்ந்த நிலையில், தெய்வயானை அம்மையும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், சந்திரன், சித்தர், வித்யாதரர் நான்முகன். இந்திரன், கலைமகள், நாரதர் புடைசூழ கருவறை குகைச்சிற்பம் காண்போர் கண்களையும் மனத்தையும் ஒருசேரக் கவர்கிறது.

‘‘பரங்குன்றில் மகிழ்வோடு பாங்குடன் தெய்வயானை கரம்பற்றி நின்ற கந்தா!’’

– என்று பாவலர்கள் பாடி மகிழ்கின்ற திருப்பரங்குன்றத்தில் தரிசனம் கண்டு அருமையான பல பாக்களை அருணகிரியார் அருளிச் செய்தார். அருணகிரிநாதர் ஆறுமுகன் அருள்புரிகின்ற அனைத்துத் தலங்களுக்கும் சென்று வழிபட்டு பதினாறு ஆயிரம் திருப்புகழ்ப் பாடல்கள் பாடினார் என்று திருப்புகழ்ப் பாயிரப் பாடல் ஒன்றின் மூலம் அறிகின்றோம். ஆனால், நம் தவக்குறைவு ஆயிரத்து முந்நூறு பாடல்களே தற்போது கிடைத்துள்ளது.

சங்கப் பாடல்களைத் தேடி எடுத்து பதிப்பித்த உ.வே.சாமிநாதர் போல, திரு.வ.த.சுப்ரமணியம் அவர்களே திருப்புகழைச் சேகரித்து அச்சில் நூலாக்கி பேருபசாரம் செய்தார். அக்கால அறிஞர்களின் பேருழைப்பிற்கு நன்றிக் கடனாக நாம் செய்ய வேண்டிய அத்தமிழ் நூல்களில், ஆழங்கால்பட்டு அவற்றின் அருமை பெருமைகளை வருங்காலத் தலைமுறையினர் போற்றிப் பாதுகாத்து பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செயுமாறே
– என்று திருமூலர் பாடியது போல் அருணகிரிநாதரும்.

அருணதள பாதபத்மம் அருணகிரிநாதரும்
அரியதமிழ் தானளித்த ஆது நிதமுமே துதிக்க
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமேபெற வேலவர் தந்தது!
– என்றும் பாடுகிறார்.

ஆசா பாசங்களிலேயே சிக்குண்டு, அன்றாடம் கவலை வலைகளிலே சிக்கிக் காணாமற் போய்விடுகிறதே பெறுதற்கரிய இந்த மானிட வாழ்க்கை! என்று நம்மை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கிறது, அருணகிரி யாரின் திருப்பரங்குன்றத் திருப்புகழ்.

‘‘சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே!
சங்கரன் பங்கிற் சிவை பாலா!
செந்திலங் கண்டிக் கதிர் வேலா!
தென் பரங் குன்றிற் பெருமாளே!

ரத்தினச் சுருக்கமான இந்த சின்னஞ் சிறிய திருப்புகழிலே அனுபூதி ரகசியத்தை நமக்குக் கற்பிக்கிறார், அருணகிரியார்! மகாகவி பாரதியாரும், இக்கருத்தை வழிமொழிகின்றார்.
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி!
ஒப்பி உனது ஏவல் செய்வேன்! உனது அருளால் வாழ்வேன்!

பொதுவாக, மனிதர்களின் மனம் ஆக்க பூர்வமான சிந்தனைகளிலும், ஆண்ட வனின் வழிபாட்டிலும் அரை நிமிடம்கூட பொருந்தி இருப்பதில்லை. ஆனால், எந்நேரமும் ஆசை வலைப்பட்டு அல்லல் படுகின்றது.

‘‘சரண கமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவ வினையிலே ஜனித்த தமியன்’’
– என்று சுவாமிமலைத் திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர்!

திருமுருகவாரியார் சுவாமிகள் கூறுகிறார்.
‘‘பசுவை ஒரு கயிற்றால் கட்டுவார்கள்
யானையை இரு சங்கிலிகளால் கட்டுவார்கள்
குதிரையை மூன்று கயிறுகளால் கட்டுவார்கள்
ஊஞ்சலை நான்கு சங்கிலிகளால் கட்டுவார்கள்
ஆன்மாக்களாகிய நாம், ஐந்து சங்கிலி
களால் கட்டப்பட்டு இருக்கின்றோம்.

கயிறு அதிகம் இருப்பதால், மனித மனத்திற்கு மிதமிஞ்சிய முரட்டுத்தனம் இருப்பது புலனாகின்றது அல்லவா!‘கந்தன்’ என்றால் ‘பற்றுக் கோடாகத் திகழ்பவன்’ என்று பொருள். சதா சர்வகாலமும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும் நாம் இறைவன் திருவடியை உறுதியாகப் பற்றினால் உய்வு பெறலாம். திருவள்ளுவர் திருக்குறளில் இக்கருத்தை

உறுதிப்படுத்துகின்றார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மனக் கவலைக்கு மருந்தே தெய்விகத் தியானம்தான்!
‘கந்தன் என்று என்று உற்று உனைநாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ!
தந்தியின் கொம்பைப் புணர்வோனே!
சங்கரன் பங்கிற் சிவை பாலா!

இந்திரனின் மகளான தெய்வயானை அம்மையாரை தேவலோகத்தில் ‘ஐராவதம்’ என்ற யானையே வளர்த்தது. அக்கருத்தையே ‘தந்தியின் கொம்பைப் புணர்வோனே!’ என்றும் அடி விளக்குகிறது. திருப்பரங்குன்றம் முருகன் தெய்வயானை திருமணக் கோலத்தில் விளங்கும் திருத்தலம் ஆதலால் பொருத்தமாக இப்பாட்டில் முருகனை ‘தந்தியின் கொம்பைப் புணர்வோனே’ என்று அழைத்து ஆனந்தம் கொள்கிறார். தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் விளங்கும் தென் பரங்குன்ற முருகனை வணங்கும் இப்பாட்டில் திருச்செந்தூரையும், இலங்கையில் உள்ள கண்டி ஆலயத்தையும்

‘செந்திலங் கண்டிக் கதிர்வேலா!’
– என்று குறிப்பிடுகிறார்.

விண்ணகத்தையே மறைக்கும் அளவுக்கு விசாலமாக கிளைபரப்பி, விழுதிறக்கி பிரம்மாண்டமாக வளரும் ஆலமரம் ஒரு சின்னஞ்சிறு விதைக்குள் அடங்கியிருப்பதை ‘விதைக்குள்ளே இருக்கிறது விசுவ ரூபம்!’ என்று கவிஞர்கள் பாராட்டுகிறார்கள். அப்படி இந்த எட்டுவரி திருப்புகழில் எத்தனை சிந்தனைகளை ஏற்றி இருக்கிறார் அருணகிரிநாதர் என்று எண்ணிப் பார்ப்போம்!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post முதற்படைவீடு appeared first on Dinakaran.

Related Stories: