மரமும் முருகனும்

புகழ்பெற்ற மற்றும் புராதனமான தலங்களில் தலவிருட்சங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். முறையாக வழிபாடு நடைபெறாத தலங்களில் இறையாற்றலானது தல விருட்சத்திலோ அல்லது விமான கலசத்திலோ தங்கும் என்பர். இறைவனின் பொருட்டு இயற்கையைப் பாதுகாக்கும் தலவிருட்சம் என்பது. இந்த விருட்சங்களுக்கும் முருகப் பெருமானுக்கும் சம்பந்தமுண்டு. வள்ளியை மணக்க வந்த முருகப்பெருமான் வள்ளியுடன் பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்குத் திடீரென வந்த நம்பிராஜனைக் கண்டதும் முருகன் வேங்கை மரமாக மாறினார்.

வேறுவேறு வடிவங்கள் எடுத்து முருகனுடன் போர்செய்த சூரபதுமன் இறுதியில் எடுத்தது மாமர வடிவம்தான். அதை முருகன் தன் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்து சேவலும் மயிலுமாக மாற்றியருளினார். திருத்தச்சூர் என்ற தலத்துத் திருப்புகழில் முருகனை, ‘‘தச்சா’’ என்று குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர். ஆம். மாமரமாக வந்த சூரபதுமனைத் தன்னுடைய ஞானவேலாகிய உளியின் மூலம் இரண்டாகப் பிளந்து உயிருள்ள இரண்டு சிற்பங்களைச் செதுக்கியதால் முருகனைத் தச்சன் என்று அழைப்பதும் சரிதானே.

முருகன் காஞ்சிபுரத்தில் மாவடிக் கந்தன் என்று அழைக்கப்படுகிறார். மாமரத்தின் கீழ் இருப்பதால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவரை, ‘‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேன்’’ என்று போற்றுகின்றனர். திருவிடைக்கழி என்ற தலத்தில் குரா மரத்தின் அடியிலும் முருகன். இவர் குரா வடிவேலர் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும், முருகனுக்குக் கடம்ப மரத்தில் மலரும் கடம்பமலர் மிகவும் விருப்பமானதாகும். அதனால்தான் அவருக்குக் ‘கடம்பன்’ என்றும் பெயர். கொங்குநாட்டுப் பகுதியில் வேங்கை முதலிய மரங்களைக் கொண்டு காவடிகள் செய்கின்றனர். அதைத் தோள்மேல் சுமந்து செல்லும்போது, அதுவும் முருகப் பெருமான்தான் என்றே பயபக்தியுடன் சுமந்து செல்கின்றனர்.

அந்த மரக்காவடிகளுக்கு முருகனுக்குச் செய்வதைப் போன்றே, அபிஷேகம், அலங்காரம், வழிபாடு, அர்ச்சனை என அனைத்தும் செய்கின்றனர். அத்துடன் முருகனுக்கு இருப்பதைப் போலவே காவடிகளிலும் ஆறுமுகம் கொண்ட முருகனைச் செதுக்கி, ‘‘ஆறுமுகக் காவடி’’ என்று வணங்குகின்றனர்.

கோவைக்கு மேற்கே, மருத மரங்கள் நிறைந்த மலையில் எழுந்தருளியதுடன் அந்த மரத்தின் பெயராலேயே ‘மருதாச்சல மூர்த்தி’ என்று பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார். மரங்கள் அடர்ந்திருக்கும் மலையில் இருப்பதால் முருகன் குறிஞ்சிக் கடவுள். மரத்தை மருகன் முருகனாகவும் முருகனை மரமாகவும் வழிபடுவது தமிழர் மரபு. சங்க காலத்தில் மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கருதி வழிபாடு செய்யப்பட்டது. முருகக் கடவுள் மூதாட்டி ஔவையிடம்கூட விளையாட, ‘‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று நாவல் மரத்தின்மீது அமர்ந்து நம் ஆவலை அதிகரிக்கும்படி அருளினார். முருகனுக்கும் மரங்களுக்கும் சம்பந்தம் அதிகம். இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பது முருக வழிபாட்டில் தெளிவு.

முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post மரமும் முருகனும் appeared first on Dinakaran.

Related Stories: