மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜை ஏன் செய்கிறார்கள்?

?வீட்டிற்குள்ளே நீச்சல் குளம் என்பது இருக்கலாமா?
– கௌரிகண்ணன், தி.நகர்.

அந்த நாளில் அரண்மனையில் நீச்சல் குளம் என்பது இருந்த ஒரு விஷயம்தானே. அரண்மனை போன்ற பங்களா வீடுகளில், காம்பவுண்ட் எல்லைக்குள் இருக்கலாம். ஆனால், வீட்டிற்குள்ளாக இருக்கக் கூடாது. அதிலே சுழற்சி முறையில் ஒரு புறம் நீர் வந்து கொண்டும், மறுபுறம் நீர் வெளியேறிக் கொண்டும் இருக்க வேண்டும். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளி ஆட்கள் யாரும் அதில் குளிக்கக் கூடாது. தென்கிழக்கு மூலையில் நீச்சல் குளம் அமைக்கக் கூடாது. நீச்சல்குளம் அமைப்பதற்கு இதுபோன்று பல விதிமுறைகள் உண்டு. அதன்படி அமைத்துக்கொள்ளலாம்.

?திதி, தெவசம், சிராத்தம் இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? விளக்கம் தாருங்கள்.
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

இந்த மூன்று சொற்களையும் ஆண்டிற்கு ஒரு முறை வரும் முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்று ஒரே பொருள் தரும் வகையில் நாம் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறோம். உண்மையில் இந்த மூன்று வார்த்தைகளும் வெவ்வேறு விதமான பொருளைத் தருபவை. திதி என்றால், தேதி என்று அர்த்தம். கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் இன்றைய தினம் ஜூன் மாதம் 6ம் தேதி என்றும் தமிழ் மாத காலண்டர் அடிப்படையில் வைகாசி மாதம் 24ம் தேதி என்றும் ஒரு கணக்கு வைத்திருப்பதைப் போல, சாந்திரமான சம்பிரதாயப்படி ஒரு கணக்கு என்பது உண்டு. இந்த கணக்குதான் நமது இந்தியாவில் பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சாந்திரமான சம்பிரதாயப்படிதான் விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, கோகுலாஷ்டமி என்றெல்லாம் பண்டிகைகள் திதியின் பெயரைக் கொண்டதாக உள்ளது. அந்த கணக்கின்படி இந்த ஜூன் மாதம் 6ம் தேதி என்பது அமாவாசை நாள் ஆக வருவதால், சாந்திரமான வைசாக மாதத்தின் 30வது நாள் ஆக கணக்கில் கொள்ளப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்த நாள் ஆகிய வளர்பிறை ப்ரதமை திதி என்பது அடுத்த மாதத்தின் முதல் தேதியாக அமைந்து விடுகிறது. அஷ்டமி திதி என்று சொன்னால், எட்டாவது நாள் என்று பொருள்.

இந்த வரிசையில் பௌர்ணமி என்பது 15ம் தேதி ஆகவும், தேய்பிறை ப்ரதமை என்பது 16வது நாள் ஆகவும் அமைகிறது. இப்படி திதி என்றால் தேதி என்பதே பொருள் ஆகிறது. அப்பா இறந்த தேதி, அம்மா இறந்த தேதி என்பதை அப்பா இறந்த திதி, அம்மா இறந்த திதி என்று சொல்லத் தொடங்கி கடைசியில் திதி என்றாலே நினைவுநாள் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. அதேபோல, `திவஸ்’ என்ற வார்த்தைக்கு ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய நாள் என்று பொருள். `ஸ்வதந்த்ர திவஸ்’ என்றால் சுதந்திர தினம் என்றும் `ஜன்ம திவஸ்’ என்றால் பிறந்தநாள், `விவாஹ திவஸ்’ என்றால் திருமணநாள் என்றும், வட இந்தியர்கள் சொல்வார்கள். அதேபோலத்தான் பெற்றோர் இறந்த நாளைக் குறிக்கும் வகையில் `மரண திவஸ்’ என்ற வார்த்தையும் தோன்றியது. ஆனால், நாம் திவசம் என்றால் இறந்த நாள் என்று மட்டும் நினைவில் கொள்கிறோம். அடுத்ததாக சிராத்தம் என்ற வார்த்தைக்கான பொருளையும் பார்ப்போம். சிரத்தையுடன் செய்யக்கூடிய செயலுக்கு “சிராத்தம்’’ என்று பெயர். இந்த உலகத்திலேயே மிகவும் சிரத்தையுடன் செய்யவேண்டிய செயல் தங்கள் பெற்றோருக்கு அவர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டிய சடங்குகளே ஆகும். அதிலும் ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய அவர்களுடைய நினைவு நாள் அன்று செய்ய வேண்டிய சடங்குகளை முழுமையான சிரத்தையுடனும் பொறுப்புடனும் செய்து முடிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. சிரத்தையுடன் செய்ய வேண்டிய செயல் என்பதால் அது சிராத்தம் என்று அழைக்கப்பட்டது. ஆக ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய முன்னோர் வழிபாட்டிற்கு உரிய நாளை திதி என்றோ திவசம் என்றோ குறிப்பிடுவதைவிட சிராத்தம் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

?ஒரு ஜாதகத்தில், 5ல்கேது இருந்தால் குழந்தைப்பேறு கடினம் என்கிறார்களே, உண்மையா?
– சாமாராவ், பெங்களூரு.

உண்மையில்லை. 5ல்கேது இருந்தாலும் குழந்தைப்பேறு என்பது கிடைக்கும். குழந்தையின்மை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம், 3ம் பாவம், 5ம்பாவம், 7ம்பாவம், 9ம்பாவம் மற்றும் 12ம்பாவம் என இத்தனை பாவங்களில் ஏதேனும் ஒன்று கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைப்பேறு கிடைப்பதில் தடை உண்டாகலாம். 5ல்கேது இருந்தால் குழந்தைப்பேறு கடினம் என்று சொல்வது முற்றிலும் தவறு. அடியேனுக்குத் தெரிந்து 5ல் வெறும் கேது மட்டும் அமர்ந்த நிலையில் 10 பிள்ளைகள் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜாதகத்தில், 5ல்கேது இருந்தால் குழந்தைப்பேறு கடினம் என்று சொல்வது தவறுதான். அதில்
எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜை ஏன் செய்கிறார்கள்?
– சுரேஷ், சென்னை.

`ம்ருத்யு’ என்றால் மரணம் என்று பொருள். ஜயம் என்றால் வெற்றி. `ம்ருத்யுஞ்ஜயன்’ என்றால் மரணத்தை வெற்றி கொள்பவன் என்று அர்த்தம். சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனுக்குத்தான் ம்ருத்யுஞ்ஜயன் என்று பெயர். அவரை நினைத்து செய்யப்படுவதே இந்த மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜை என்பது. ஒருவர் நோய்வாய்பட்டிருக்கும்போதும், அல்லது எதிரிகளால் உயிருக்கு ஆபத்து எனும்போதும், தீர்க்காயுளை வேண்டியும், இந்த பூஜையைச் செய்வார்கள். மரணபயம் நீங்குவதற்காக செய்யப்படுவதே இந்த மஹாம்ருத்யுஞ்ஜய பூஜை என்று புரிந்துகொள்ளலாம்.

?நாகதோஷ நிவர்த்திக்கு எங்கு செல்லவேண்டும்?
– கே.முருகன்.

தோஷம் என்பதும் யோகம் என்பதும் அவரவர்கள் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்தது. ஜாதகத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தால், இறைவனை முழுமையாக நம்பி வழிபாடு செய்யுங்கள். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, கடமையைச் செய்யுங்கள். தர்மம் தவறாது நடந்து வந்தாலே தானாக ஜாதகத்தில் உள்ள குறை என்பது நீங்கி நிறை என்பது உண்டாகும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை உண்டாவதற்காக அருகில் உள்ள அரசமரத்தடி நாகரை அதிகாலைப் பொழுதில் வலம் வந்து வணங்குங்கள். நாகதோஷம் என்பதும் யோகத்தைத் தரும் வகையில் மாறிவிடும்.

 

The post மஹா ம்ருத்யுஞ்ஜய பூஜை ஏன் செய்கிறார்கள்? appeared first on Dinakaran.

Related Stories: