துலாம் பெண்களின் வெற்றி ரகசியம்

துலாம் ராசி / லக்கினத்துப் பெண்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதனால், அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்களாக இருப்பார்கள். வளவளவென்று பேசாமல் இனிமையான சொற்களாக குறைவாகப் பேசுவார்கள். மற்றவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு நட்புணர்வுடன் பேசுவார்கள். தன்னுடைய அழகும் கவர்ச்சியும் குறித்து இவர்களுக்குள் சற்று பெருமை உண்டு.

ஏற்ற தொழில்

துலாம் பெண்கள் பொழுதுபோக்கு, சுற்றுலா, கேளிக்கை, மாடலிங், நடிப்பு, நாடகம், அணிமணி ஆபரணங்கள், துணிமணி விற்பனை, தையல் அலங்கார வேலைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். துலாம் ராசி பெண்கள் டீம் லீடராக இருக்க பொருத்தமானவர்கள். மகளிர் குழுக்களை வைத்து நடத்துவதில் சிறப்பாக செயல்படுவர். டீம் ஸ்ப்ரிட்டை அதிகரித்து ஊக்கம் அளித்து வழிநடத்துவர்.

கூட்டுக் குடும்பத்துக்கு ஏற்றவர்

மனிதர்களுடன் பழகும் போது இவர்களுக்கு பிடிக்காதவர்களைகூட சட் என்று முகத்தை முறித்துக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து அவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவதற்குப் பாடுபடுவார்கள். நட்பு, வழக்கு, காதல், பாசம், தொழில் என எதுவாக இருந்தாலும் இவர்கள் எதையும் விட்டுச் செல்ல விரும்புவதில்லை. தொட்டுத் தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.

காதல் சிட்டு

துலாம் பெண்களைப் போன்ற ரொமான்டிக் உணர்வுடைய பெண்களைக் கண்டு பிடிப்பது அரிது. லவ் பேர்ட்ஸ் போன்றவர்கள். 24 மணி நேரமும் தன் கணவருக்கோ காதலருக்கோ தனது அன்பைப் பரிமாறிக் கொண்டே இருப்பர். வேலை பார்க்கும் நேரங்களிலும்கூட மெசேஜ் அனுப்புவது, பாட்டு அனுப்புவது, நகைச்சுவை மீம்ஸ் என்று ஏதேனும் ஒன்றை அனுப்பிக் கொண்டே இருப்பது இவர்களின் வழக்கம்.

வசிய சக்தி அதிகம்

துலாம் பெண்களுக்கு தன்னால் எந்த ஆணையும் வசியப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையும் கர்வமும் இருக்கும். இவர்களால் முடியாது என்று நம்பும் ஒரு செயலில் சந்தேகத்துடன் இவர்கள் இறங்குவது கிடையாது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி ஒன்றே இலக்கு என்பதால் அதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆலோசிப்பதில்லை. எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள்.

அமைதிப் புறா

துலாம் பெண்கள், நயமாகவும் நாகரீகமாகவும் வீட்டு ஆண்களிடம் நடந்து கொள்வார்கள். விட்டுக் கொடுத்து போவார்கள். வறட்டு பிடிவாதம் கிடையாது. திமிரான பேச்சு அல்லது செயல்பாடு இருக்காது. துலாம் பெண் இருக்குமிடம் அமைதிப் பூங்காவாக இருக்கும்.

துலாம் ராசி தாய்

துலாம் பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் அன்புடனும் பாசத்துடனும் கனிவுடன் நடந்து கொள்வர். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் நகர்வையும் கண்காணிப்பர். இவர்களின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து தாயின் வார்த்தையைத் தலைமேல் கொண்டு பிள்ளைகள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். பிள்ளைகளைக் கோபிப்பதோ தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி அவர்கள் நடக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தும் குணமோ துலாம் ராசி தாய்மாரிடம் கிடையாது. குழந்தையைக் கொஞ்சி தன் அன்பினால் கட்டுப்படுத்தி தன் வசப்படுத்தி தன் சொல் கேட்கும்படி வைத்துக் கொள்ள இவர்களால் முடியும்.

பொருத்தமான ஜோடி

துலாம் பெண்களுக்கு மிதுனம், சிம்மம், மேஷம், தனுசு ஆகிய ராசிகள் பொருத்தமான ராசிகளாக அமையும். இவர்களின் திருமண வாழ்வு அன்பும் அறனும் உடைய வாழ்வாக சிறப்பாக விளங்கும் சமாதான முயற்சியில் வெற்றி பெறுவதே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால் யாரையும் சண்டையை போட்டு விலக்காததால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். பிள்ளைகள், கணவர், புகுந்த வீட்டார், பிறந்த வீட்டார், அனைவரோடும் இணக்கமாக இருப்பார்கள்.

எதிரிகள் ஜாக்கிரதை

துலாம் பெண்களின் அழகையும் பழகும் விதத்தையும் பார்த்துப் பலர் பொறாமைப்படுவர். தங்களுக்கு இவள் கிடைக்கவில்லையே என்று நினைக்கும் ஆண்கள் இவர்களைப் பற்றி கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவர். இதனால் இவர்களைச் சுற்றி இவர்களுக்கு ஆகாதவர்கள் பலர் இருந்து கொண்டே இருப்பார்கள். சில சமயம் அவர்களின் தொல்லையிலிருந்து விலக துலாம் ராசி பெண்கள் கொஞ்சம் தந்திரமாகவும் செயல்படுவார்கள். வெளிப்படையாக சண்டை போட மாட்டார்கள். கோள் மூட்டியோ அல்லது போட்டுக் கொடுத்தோ தனக்கு ஆகாதவர்களை அந்த இடத்தைவிட்டு அகற்றி விடுவர்.

நன்றி, மன்னிப்பு

துலாம் லக்னத்து பெண்கள், உறவுகள் நிலைபெற வேண்டும் என்ற காரணத்துக்காக மன்னிப்பு கேட்கத் தயங்கமாட்டார்கள். சில முரட்டு ராசியினரைப் போலத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வறட்டு வாதம் செய்ய மாட்டார்கள். சட்டென்று கீழே இறங்கி வந்து மன்னிப்பு கேட்டு அந்த சூழ்நிலையின் கடுமையை மாற்றி மென்மையாக்கி விடுவர்.

கவர்ச்சி, கண்ணியம், கர்வம

துலாம் ராசி பெண்கள் ஏழை பணக்கார வித்தியாசம் இன்றி எப்போதும் குளித்து, தலை சீவி, சுத்தமான உடை உடுத்தி, கண்ணியமாகக் காட்சியளிப்பார்கள். எந்த துறையில் இருந்தாலும் ஆபாசமாக உடை உடுத்துவதோ அநியாயமாகப் பேசுவதோ அடாவடித்தனங்களில் ஈடுபடுவதோ கிடையாது. பெண்மையின் இலக்கணமாக நளினமாக நாகரீகமாக இருப்பது இவர்களின் வழக்கம்.

(ச)மையல் ராணி

துலாம் பெண்கள் சமையல், மையல் இரண்டிலும் கெட்டிக்காரர்கள். விருந்து விழாக்களில் எல்லோரது பாராட்டையும் பெற்று விடுவர். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் உறவினர்கள் இருப்பார்கள். இவர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் மனம் குளிர பாராட்டி மகிழ்வார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என யாராக இருந்தாலும் சின்ன சின்ன உதவிகளைச் செய்து அவர்களின் அன்பைப் பெறுவார்கள். விழாக்களின்போது பாட்டுப் பாடி சுற்றி இருப்பவர்களைக் கவர்ந்துவிடுவர்.

நிறைவு

துலாம் பெண்கள் இருக்கும் இடங்களில் அன்பும், அழகும், இனிமையும், காதலும், கண்ணியமும் இருக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் விரும்பும் ராசியினர் துலாம் ராசி பெண்கள் ஆவர். பெண்மையின் இலக்கணம் துலாம் ராசி / லக்னத்துப் பெண்கள்.

The post துலாம் பெண்களின் வெற்றி ரகசியம் appeared first on Dinakaran.

Related Stories: