கோடைவிடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு முதல்நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது

*மாணவ, மாணவிகளுக்கு ஆதார்பதிவு

*வங்கி கணக்கு துவங்குதல் முகாம் நடைபெற்றது

தஞ்சாவூர் : தமிழகத்தில் கோடைவிடுமுறைக்குப்பின் நேற்று (10ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கியது. முதல்நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தென்கீழஅலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை கலெக்டர் தீபக் ஜாக்கப், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் வழங்கினர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் பயிலும் பள்ளியிலே வங்கி கணக்கு எண் துவங்குதல் முகாமினை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலையில் நேற்று துவக்கி வைத்தனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:பள்ளி கல்வித் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச்சட்டை, மழைக்கால ஆடை, உறை காலணி, கால் உறைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற 14 வகையான விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முறையாக முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவியர் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை திட்டங்களை வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்.

குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிறுத்தமின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் மாணவ, மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக நேரடி பயனாளர் பரிமாற்றம் மூலம் (DBT)பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளியிலே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின்கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியில் ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினை (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குர் மேற்கொள்ள அனுமதி அளித்தும் அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 720 ஆதார் பதிவு கருவிகளை கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.தமிழ்நாடு மின்னணு நிறுவனம்(ELCOT) ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வியாண்டின் பள்ளி துவக்க நாளான நேற்று அனைத்து வட்டாரங்களிலும் 27 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் பயிலும் பள்ளியிலே வங்கி கணக்கு எண் துவங்குதல் முகாம் நேற்று நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாநகராட்சி உறுப்பினர் மேத்தா அவர்கள், தலைமை ஆசிரியர் வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோடைவிடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு முதல்நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: