கீழடி 10ம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்து ‘தா’ பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வை கடந்த 18ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி கீழடியைச் சேர்ந்த ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது 1.50 ஏக்கர் நிலத்தில் 12 குழிகள் தோண்டப்பட்டு இதில், 2 குழிகளில் மட்டும் கடந்த 7 நாட்களாக அகழாய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. இரண்டடி ஆழம் தோண்டப்பட்டதில், கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 28 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் ‘தா’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணம் கொண்ட உடைந்த பானை ஓடு கிடைத்துள்ளது.

தமிழி என்பது தொன்மையானதும் தற்போதைய தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியும் ஆகும். தமிழ் பிராமி அல்லது தமிழி என்பது கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து 4ம் நூற்றாண்டு வரை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையாகும்.
தற்போது அது கிடைத்திருப்பது, தொல்லியல் துறை அலுவலர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ‘தா’ என்ற எழுத்துக்குப் பின், அடுத்த எழுத்து இருப்பதற்கான தடயம் உள்ளது என தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

The post கீழடி 10ம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்து ‘தா’ பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: