கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பாதிப்பு; இதுவரை 86 பேர் டிஸ்சார்ஜ்: மருத்துவக்குழுவுக்கு உறவினர்கள் பாராட்டு


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 110 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 95 பேர் சிகிச்சையில் முன்னேற்றமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 20 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே நேற்று 2ம் கட்டமாக 46 பேர் குணமடைந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாகனத்தில் அழைத்து சென்று அவரது வீடுகளிலேயே விடப்பட்டனர்.

இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் இருந்து 66 பேரும், தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேர், புதுவை ஜிப்மரில் இருந்து 6 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 12 பேர் என 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் உத்தரவின்படி தீவிர சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். மேலும் விஷ சாராய பலி 60 ஆக இருந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மரில் ராமநாதன் (62), சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார்(37), சரசு(52) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு 63 ஆக உயர்ந்துள்ளது.

3 ஆணையம் சார்பில் விசாரணை
தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் கடந்த 21ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விசாரித்தது. இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வட்டேபள்ளிராம்சந்தர், லவ்குஷ்குமார் ஆகியோர் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நேற்று விசாரித்தனர். பாதிக்கப்பட்டோர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள், மெத்தனால் பயன்பாடுகள் கண்காணித்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கைதானவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு நேற்று கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், இறந்தவர்களில் மகளிர்,சிறுவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தேன் என்றார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து விசாரித்தார்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பாதிப்பு; இதுவரை 86 பேர் டிஸ்சார்ஜ்: மருத்துவக்குழுவுக்கு உறவினர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: