மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: அவதூறு வழக்கில் பதில் தராததால் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால் அவரது உறவினர் மகேசுக்கு 5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான செய்தி வெளியானதால் தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி மகேசுக்கு எதிராக டி.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியம் ஆஜராகி, வழக்கில் மகேஷ் 583 நாட்களுக்கும் மேலாக எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததால் அபராதமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்துமாறு மகேசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: அவதூறு வழக்கில் பதில் தராததால் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: