காரியம் ஆக வேண்டும் என்றால் அமைச்சர்களை சுற்றி வரவேண்டும்: அவையை குலுங்கவைத்த துரைமுருகன்

சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது: இங்கு பேசிய பல்லாவரம் உறுப்பினர் இ.கருணாநிதி என்னுடைய இலாகாவை குறித்து மளமளவென்று ஒரு 10 ஊர்களைச் சொல்லி எல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்கிறார். இது எனக்கே இப்போது ஞாபகம் வரவில்லை. நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எப்படி செய்தோம் என்றால், சபையில் பேசும்போது பேசிவிடுவோம். அதற்குப் பிறகு, ஒரு திட்டம் என்றால், அந்தத் திட்டத்தை 5 காப்பி எடுத்து வைத்துக் கொள்வோம். அடிக்கடி சென்று மந்திரியைப் பார்த்து, அவருக்கு ஆயிரம் வேலை இருக்கிறது என்று கிளம்பி போய்விடுவார்.

இரண்டாவது முறை பார்த்து, மூன்றாவது முறை பார்த்தால் அவருக்கு ஐயையோ மூன்று முறை வந்துவிட்டார் எம்எல்ஏ, அதற்குப் பிறகுதான் அவருக்கு ஞாபகம் வரும். ஆகையினால், உறுப்பினர்கள் பேசுங்கள், சபையில் பேசி உங்கள் தொகுதியைப் படிக்க வேண்டும். அதற்கு நீங்கள் சபையில் பேச வேண்டும். ஆனால், காரியம் ஆக வேண்டும் என்றால் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் காலையிலேயே, சபை முடிந்தால் 5 மணி வரையிலும் சுற்றி சுற்றி எல்லா அதிகாரிகளையும் பார்த்து கேட்போம். அப்போதுதான் ஒவ்வொன்றும் நடக்கும். ஆகையினால், தொகுதிக்கு நீங்கள் பேசுவதால் மட்டுமல்ல, இதுபோன்று செய்தால்தான் நீங்கள் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும் என்பதை என்னுடைய அனுபவத்தில் நடந்ததை மற்ற உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்’’ என்றார். இதைக்கேட்டு அவையில் சிரிப்பொலி எழுந்தது.

* சிறப்பு சட்டத்தால் 1,440 போலி பத்திரப்பதிவுகள் ரத்து: அமைச்சர் மூர்த்தி தகவல்
சட்டப்பேரவையில் நேற்று மாலை நடைபெற்ற வணிக வரித்துறை, இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நாங்குநேரி உறுப்பினர் ரூபி மனோகரன் (காங்கிரஸ்) பேசியதாவது: கிராமப்புறங்களில் விவசாய நிலங்களை அவசர தேவைக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். எனவே விதி 22(ஏ)வை தளர்த்த வேண்டும். பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு பதிவு கட்டணத்தில் 2 சதவீதம் குறைக்க வேண்டும். போலி பத்திரவுப் பதிவை களைய வேண்டும். 100 ஆண்டுகள் பழைய நாங்குநேரி சார் -பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். போலி பத்திரப்பதிவை தடுக்க வேண்டும். நாங்குநேரி மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். களக்காடு பகுதி மேல்நிலை பள்ளிக்கு வந்து செல்ல அரசு பஸ் வசதி இல்லை” என்றார். இதற்கு பதில் அளித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி 1,440 போலி பத்திர பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. நாங்குநேரியில் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு இந்த ஆண்டே புதிய கட்டிடம் கட்டி தரப்படும்” என்றார்.

நிதித்துறை மற்றும் கருவூல கணக்குத்துறை அலுவலர்களின் திறனை மேம்படுத்த ரூ.1.50 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு
பேரவையில் நேற்று நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
* நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்குத் துறை அலுவலர்களின் திறனை மேம்படுத்த தேவையான பயிற்சி இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனங்களின் செயலாளர்கள் கழகம், சென்னை பொருளியல் கல்வி கழகம், சென்னை கணித அறிவியல் கழகம் மற்றும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக ரூ.1.50 கோடியில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். இதனால் சுமார் ஆயிரம் அலுவலர்கள் பயன்
பெறுவர்.
* அரசுத்துறை மற்றம் முகமைகள் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இலக்குகளை அடைந்துள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்திட செயல்திறன் தணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வரும் நடப்பாண்டில் 40 கருப்பொருள்களில் செயல்திறன் தணிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் உயர்நிலை தணிக்கை அலுவலர்களுக்கு துறைசார் புலமை தரவுப்பகுப்பாய்வு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
* அரசு அலுவலகங்களின் நடைமுறைகள், திட்டங்கள், திட்டச் செயலாக்கம் பரந்து விரிந்து தணிக்கைச்சூழல் கடினமடைந்து வருவதாலும், பொதுமக்கள் உள்ளிட்ட பங்குத்தாரர்களின் தேவைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் விரிவடைந்து வருவதாலும், தணிக்கைத் துறைகளில் புதிதாக நியமனமாகும் அனவைரும் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணிபுரியும் மற்றும் புதியதாக பணி நியமனமாகும் தணிக்கை அலுவலர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிலான பயிற்சி நடத்தப்படும்.

துறைகளில் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்பு இணையதளம்
பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையில் வெளியிட்ட அறிவிப்புகள்:
* ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தமிழ்நாடு பெருநிறுவனங்கள் சமுக பொறுப்பு இணையதளம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்படும். இந்த இணையதளம் பல்வேறு மண்டலங்கள் மற்றும் துறைகளில் உள்ள திட்டங்களுடன் தொழில் மற்றும் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வினை இணைக்கும் ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் துறைகளில் சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்து, சம்மான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
* மாநில திட்டக் குழுவின் கிழ் இயங்கும் தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து, மாநிலத்தின் நிலைபயன்பாட்டு முறைகளுக்கான முன்கணிப்பு மாதிரி கருவியான நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
* சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், சென்னை ஐஐடி போன்ற உயர் தர கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, மாநில திட்டக்குழு, பொது மேலாண்மையில் ஆறு மாத சான்றிதழ் படிப்பினை ஆண்டொன்றிற்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும்.
* பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து மாவட்ட அளவிலான பியிர் பரப்பளவை மதிப்பிடுவதற்கு அதிநவீன தொலை உணர்தல் மற்றும் டிரோன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிர் புள்ளி விவரங்கள் சேகரித்து முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்.

The post காரியம் ஆக வேண்டும் என்றால் அமைச்சர்களை சுற்றி வரவேண்டும்: அவையை குலுங்கவைத்த துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: