2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் தகவல்

சென்னை: பேரவையில் நேற்று நடந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, எரிசக்தி துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவில் மொத்த மின் தேவையானது 20,830 மெகாவாட் எனும் உச்சத்தை கடந்த மே 2ம் தேதி எட்டியிருக்கிறோம். அதிகபட்சமான மின் நுகர்வை கடந்த ஏப்.30ம் தேதி, 454.32 மில்லியன் யூனிட்களை நுகர்வு செய்திருகிறோம்.

பொதுவாக மின் தேவை என்பது, மிக அதிகபட்சமாக ஒரு 17,000 மெகாவாட் வரை போகக்கூடிய ஒரு நிலையில் இந்த மே மாதம் மட்டும் 20,000 மெகாவாட் தொட்டிருக்கக்கூடிய அளவில் மின் தேவை இருந்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக மின் தேவை கடந்த மே 31ம் தேதி 4,769 மெகா வாட்டாகவும், மின் நுகர்வானது 101.75 மில்லியன் யூனிட் ஆகவும் வந்திருக்கிறது. ஆக 4,769 மெகாவாட் சென்னையினுடைய மின் தேவை இருந்திருக்கிறது என்று சொன்னால், ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். ஒட்டுமொத்த கேரளா மாநிலத்திற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறதோ, அந்த மின்சாரம் என்பது சென்னை மாநகரத்தினுடைய தேவைக்கு மட்டும் தேவைப்படுகிறது.

வடசென்னை அனல் மின் திட்டங்களுடைய அலகு-3, திருவள்ளூர் மாவட்டத்தில் அத்திப்பட்டு கிராமத்தில் ஏறத்தாழ ரூ.8,723 கோடியில் 800 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நிலையத்தை முதல்வர் மார்ச் 7ம் தேதி நாட்டிற்காக அர்ப்பணித்திருக்கிறார். இந்தத் திட்டம் என்பது ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்திலே நமக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை 2 நாட்களிலே பணிகளை முடித்தோம்.

அதேபோல தூத்துக்குடியிலும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியிலும் 90 சதவீத இடங்களிலே இரண்டொரு நாட்களில் மின்தடையை சரி செய்தோம். அதேபோல, நிலக்கரியை கையாளும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்த முறை பசுமை எரிசக்திக்காக ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறோம். மேலும் புதைப்படிவ எரிபொருள் இல்லா சுற்றுச்சூழலை கொண்டு வர வேண்டும். புதிய புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். தமிழ்நாடு 19,628 மெகாவாட் புதுப்பிக்கத்தக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவில் 3வது இடத்தில் இருக்கிறது. 2023-2024ம் ஆண்டில் 1,994 மெகாவாட் கூடுதலாக நிறுவி உள்ளது.

சூரிய மின்சக்தியைப் பொறுத்தமட்டில், நிறுவுத்திறன் 8145.53 மெகாவாட்டுடன் இந்திய அளவில் தமிழ்நாடு 4வது இடத்தில் இருக்கிறது. 2023-2024ம் ஆண்டில் மட்டும் நிறுவப்பட்ட திறன் 1462.635 மெகாவாட்டாக இருக்கிறது. காற்றாலை உற்பத்தியைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு 10,590.68 மெகாவாட் நிறுவுத்திறனுடன் 2வது இடத்திலே இருக்கிறது. 2023-2024 ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள திறன் 524.48 ஆக இருக்கிறது. மரபுசாரா எரிசக்தியை ஊக்கப்படுத்தக்கூடிய வகையிலே 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். மின்னகத்திற்கு, வரக்கூடிய புகார்களை எடுப்பதற்கு கூடுதலான பணியாளர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மின்னகமும் சிறந்த முறையில் செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: