ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் விஷம் குடித்து தற்கொலை!!

ஏலூரு: ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிக்கு 164 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதேபோல், 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளை கைப்பற்றியது. இக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி அமராவதியில் 4-வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவி பிரமாணம் எடுக்க உள்ளார்.ஆந்திர சட்டமன்ற தேர்தலை வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கோடிக்கு மாநிலம் முழுவதும் பந்தயம் நடந்துள்ளது.

இதனிடையே, ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு உறுப்பினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியே மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தான் ஆந்திராவில் வெற்றிபெறும் எனவும் வேணுகோபால் ரெட்டி பலரிடம் ரூ. 30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.ஆனால் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, ஜெகன் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, வேணுகோபாலிடம் பணம் கட்டியவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர்.

கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான வேணுகோபால ரெட்டி கிராமத்தை விட்டு வெளியேறினார். செல்போன் செயலிழந்திருந்ததால், ஜூன் 7-ம் தேதி வேணுகோபால் வீட்டுக்குள் சிலர் புகுந்து ஏசி, சோஃபாக்கள், படுக்கைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய வேணுகோபால் வீட்டின் நிலைமை பார்த்துள்ளார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான வேணுகோபால் ரெட்டி, ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏலூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் விஷம் குடித்து தற்கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: