விவசாயிகள் போராட்டத்தை இழிவாக பேசிய கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு: தபெதிக அறிவிப்பு


கோவை: நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜ எம்பி கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார். அவரது தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர்.

தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார். விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனையாக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை குல்விந்தர் கவுரை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் போராட்டத்தை இழிவாக பேசிய கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு: தபெதிக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: