ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்

சென்னை: இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக குறைந்த வேகத்தில்தான் பயணம் செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதைவிட பாதி வேகத்தில்தான் பயணம் செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் மக்கள் பலர் இந்த ரயிலை விரும்பி டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21-ம் ஆண்டில் வந்தேபாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24-ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று சொல்லப்பட்ட இந்த ரயில் தற்போது அதற்குப் பாதி அளவு வேகத்திலேயே இயக்கப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால்தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும், வந்தேபாரத் ரயில்கள் வேகமாக செல்லும் என்று கூறிவிட்டு, தற்போது அதிக கட்டணத்தையும் பெற்று, திடீரென அதன் வேகத்தை குறைத்து பயண நேரத்தை அதிகரித்துள்ளது பயணிகளுக்கு இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: