சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

சண்டிகர்: சீட் கொடுக்காததால் விரக்தியில் இருந்த நடிகையும், மாஜி எம்பியுமான கிரோன் கெர், நான் பாஜகவில் தான் இருக்கிறேன் என்று கூறினார். சண்டிகர் யூனியன் பிரதேச மக்களவை தொகுதியில் போட்டியிட முன்னாள் பாஜக எம்பியும், நடிகையுமான கிரோன் கெர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. மாறாக சஞ்சய் டாண்டன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கிரோன் கெர், தேர்தல் பிரசாரத்தில் கூட பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் நேற்று சண்டிகர் வாக்குச்சாவடிக்கு வந்த கிரோன் கெர், வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னை தொடர்ந்து புறக்கணிப்பது கட்சியல்ல; சிலர்தான் என்னை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அவர்கள் எவ்வளவு பிரசாரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேர்தல் பிரசாரம் நடந்ததா? என்பது கூட தெரியவில்லை. நான் பாஜகவில் தான் இருக்கிறேன். பல நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள் கூட எனக்கு தெரிவிப்பதில்லை. இருப்பினும், எனக்கு செய்தி கொடுத்தால் அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன்’ என்றார். முன்னதாக பாஜக வேட்பாளர் சஞ்சய் டாண்டனுக்காக தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்தபோது, அவர்களுடன் கிரோன் கெர் பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: