திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி


திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலைய பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 33 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கில் கடக்கும்போது அதைவிட எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அப்போது பொறுமையுடன் ரயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் பார்த்து ரயில் வரவில்லை என்பதை உறுதிசெய்த பிறகே கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. மேலும், குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சிலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை அவசர, அவசரமாக கடப்பதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ரயில் தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். எனவே, உரிய வழிகாட்டுதல்படியே தண்டவாளத்தை கடந்துசெல்ல வேண்டும். திண்டுக்கல் ரயில் நிலைய பகுதிகளில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 33 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். சிலர் தண்டவாளம் அருகே மது குடித்துவிட்டு போதையில் அங்கேயே மயங்கி கிடக்கின்றனர். இதனால் விபத்தில் சிக்க நேரிடும் என்பதால் ரயில் தண்டவாளம் அருகே மதுஅருந்த கூடாது.

மாணவர்கள் ரயில் வரும்போது அதனருகே நின்று செல்பி எடுக்கக்கூடாது. இயற்கை உபாதை கழிக்க ரயில் தண்டவாளம் அருகே செல்லக்கூடாது. செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்கக் கூடாது. ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை எண்ணத்தில் வரும் நபர்கள் குறித்தும், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள் குறித்தும் தெரியவந்தால் பொதுமக்கள் ரயில்வே போலீசின் 1512 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: