(வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை பொதுமக்கள் அச்சம் பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

 

பேரணாம்பட்டு, மே 31: பேரணாம்பட்டு அருகே கொட்டகையில் இருந்த ஆட்டை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பெரிய தாமல்செருவு கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி ஓம்தாஸ் சிவன் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகே சரவணன் என்பவர் தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது கொட்டகையில் திடீரென புகுந்த சிறுத்தை அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்து குதறியது. இதனால் மற்ற ஆடுகள் அலறி சத்தம் போட்டன. இந்த அலறல் சத்தம் கேட்டு நிலத்தில் இருந்த நாய்கள் குரைக்க தொடங்கின. உடனே அந்த சிறுத்தை ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. கொட்டகையில் சிறுத்தை தாவி குதிக்கும் காட்சி அங்கு நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து சிறுத்தை நிலத்திற்கு வந்து ஆடுகளை கடித்து இழுத்து சென்றுவிடுகிறது. நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளையும் சிறுத்தை கொன்றுவிடுகிறது. இந்த சிறுத்தையால் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. சிறுத்தை நடமாட்டத்தில் ஆடு மேய்க்க செல்வதற்கும் அச்சமாக உள்ளது. அருகில் சிவன் கோயில் இருப்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் வந்து செல்கின்றனர். அவர்களுக்கும் இந்த சிறுத்தையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post (வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை பொதுமக்கள் அச்சம் பேரணாம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: