பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து தடுத்து நிறுத்தம் பயணிகள் 20 நிமிடம் அவதி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில்

பள்ளிகொண்டா, ஜூன் 20: பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசு பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் 20 நிமிடங்கள் அவதியடைந்தனர். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான கட்டணத்தை செலுத்த தற்போது பாஸ்டேக் வழிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதிமுறை அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மாற்று பேருந்து ஒன்று காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து, இந்த பேருந்து வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, பாஸ்டேக்கில் பணம் இருப்பு இல்லை எனக்கூறி ஊழியர்கள் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பேருந்து டிரைவர் திருப்பத்தூர் பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட பேருந்தின் பாஸ்டேக்கை சரிபார்த்தபோது பணம் இருப்பு இல்லாதது தெரியவந்தது. உடனே அதற்கு ரீசார்ஜ் செய்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் கொடுத்ததின்பேரில் அரசு பேருந்து 20 நிமிடத்திற்கு பிறகு அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. அரசு பேருந்து திடீரென தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் அதில் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், அரசு பேருந்து சுங்கச்சாவடி கான்வாயில் 20 நிமிடமாக நின்றிருந்ததால் வேலூர்- திருப்பத்தூர் செல்லும் மார்க்கமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, சுங்கக்சாவடி மேலாளரிடம் கேட்டபோது, ‘வழக்கமாக இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் கட்டணம் செலுத்தப்பட்டு சுமார் 50 டிரிப்கள் வரை பாஸ்டேக்கில் பணம் இருக்கும். ஆனால், விழாக்காலம் மற்றும் இதர காரணங்களால் மாற்று பேருந்தை இயக்கும்போது அதற்கு தற்காலிகமாக ரீசார்ஜ் இல்லாமல் பாஸ்டேக் போட்டு வைத்திருப்பர். மாற்று பேருந்து இயக்குவதற்கு முன்பே பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்துவிட்டால் இதுபோன்ற பிரச்னைகள் வராது’ என்றார்.

The post பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து தடுத்து நிறுத்தம் பயணிகள் 20 நிமிடம் அவதி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் appeared first on Dinakaran.

Related Stories: