இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் அரசு இசை கல்லூரியில் நேரடியாக 3ம் ஆண்டில் டிப்ளமோ வகுப்பில் சேருவதற்கு அரசு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400 கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர், திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில் அரசு இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளும், மேற்காண் கலைகளோடு கிராமியக் கலைகளில் பட்டயப்படிப்புகளும் உள்ளன. இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டட கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் சிற்பக்கலையில் இளங்கலை பட்டம் மற்றும் கோயில் கட்டட கலையில் பி.டெக் படிப்புகளும் உள்ளன. மேற்காணும் கல்வியகங்களில் சேருவதற்கான விவரங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த 7 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: