சென்னையில் உபா சட்டத்தில் 6 பேர் கைது.. மத்திய உள்துறைக்கு பறக்கும் ரிப்போர்ட் : விசாரணையை கையில் எடுக்கிறதா என்ஐஏ!

சென்னை : உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 6 பேர் தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த “டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்” என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய இணையாண்மைக்கு எதிராக பேசி பல்வேறு வீடியோக்களை ஹமீது உசேன் என்பவர் வெளியிட்டு வந்தார். உடனே சைபர் க்ரைம் போலீசார் ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கவுரவ பேராசிரியராக ஹமீது உசேன் பணியாற்றி வந்ததும், அதன் பிறகு அந்த பணியை விட்டுவிட்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘ஹிஷாப் உத் தஹீரிர் ‘ என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக சேர்ந்து, அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்தது.

அவரது யூடியூப் சேனலில் ஹமீது உசேன் பேச்சால் ஈர்க்கப்பட்டு தொடர்பு கொள்ளும் நபர்களை மட்டும் ரகசிய கூட்டத்திற்கு அழைத்து மூளைச்சலவை செய்து ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார், “உபா” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த வாரம் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து, ஹமீது உசேன் உட்பட 3 பேர் அளித்த வாக்கு மூலத்தை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்த முகமது மாரிஸ் (36), காதர் நவாஸ்ரீ (எ) ஜாவித் (35), அகமது அலி உமாரி (46) ஆகிய 3 பேரையும் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை போன்று கன்னியாகுமரி மற்றும் கரூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ‘ஹிஷாப் உத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் ரகசிய கூட்டம் நடத்தி இருந்தது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து, ரகசிய கூட்டம் நடந்த கன்னியாகுமரி, கரூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்கள், நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தனர். இந்த அறிக்கையை பரிசீலனை செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உகந்ததா என ஆராய்ந்து முடிவு செய்யும். இதனிடையே தீவிரவாதத்திற்கு ஆதரவாக 6 பேர் செயல்பட்டு இருப்பதால், இவ்வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் என்ஐஏ அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

The post சென்னையில் உபா சட்டத்தில் 6 பேர் கைது.. மத்திய உள்துறைக்கு பறக்கும் ரிப்போர்ட் : விசாரணையை கையில் எடுக்கிறதா என்ஐஏ! appeared first on Dinakaran.

Related Stories: