முன்னாள் முதல்வருடன் நாட்டியம் ஆடினேன்!

நன்றி குங்குமம் தோழி

நாட்டியக் கலைஞர் ராஜேஸ்வரி

‘‘ஏழு வயதில் பரதம் ஆடத் துவங்கினேன். தற்போது ஐம்பத்தேழு வயது வரை பரதநாட்டியத்தில் எனது கலைப் பயணம் தொடர்ந்து வருகிறது’’ என பெருமிதத்துடன் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நாட்டிய சிரோன்மணி ராஜேஸ்வரி. பரதநாட்டியத்தில் ஏராளமான பாராட்டுதல்களையும், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள ராஜேஸ்வரி ‘‘ஒரு முதல்வருடன் ஆடினேன், மற்றொரு முதலமைச்சரிடமிருந்து விருது பெற்றேன்” என மகிழ்வுடன் சொல்கிறார். தனது ஐம்பது வருட கலைப் பயண பரதநாட்டிய அனுபவத்தோடு பல்வேறு பிரபலங்களுடன் ஆடிய தனது மேடை அனுபவத்தையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

உங்களது கலைப் பயணம்…

தமிழரின் பாரம்பரிய கலை மற்றும் பெருமையின் முகமாக பரதநாட்டியம் இருக்கிறது என்றால் அது சற்று மிகையில்லை. எனது ஏழாவது வயதில் தான் நான் பரதக் கலையை முறைப்படி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என் அம்மா இசைத்துறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பதால் எனக்கு பரதக்கலையை கற்றுத் தரவேண்டும் என்று விரும்பினார். அதனால் நடன வகுப்பிற்கும் என்னை அனுப்பி வைத்தார். அன்று நான் பயில ஆரம்பித்த இந்தக் கலை இன்று வரை எனக்கு அனைத்துமாக இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

நான் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல், சென்னை பள்ளிக்கரணை மற்றும் ஆதம்பாக்கத்தில் ‘சைதன்யா ஸ்கூல் ஆப் பரதநாட்டியம்’ என்கிற நாட்டியப் பள்ளி மூலமாக பலருக்கு பரதப் பயிற்சி அளித்து வருகிறேன். சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரிலும் ஒரு நாட்டியப் பள்ளி உள்ளது. அதனை என் மகள் ஜெயஸ்ரீ நிர்வகித்து வருகிறார். அவரும் பரதக் கலைஞர். எங்களது நாட்டியப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பரதக்கலையை கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்து தற்போது பிரபல நாட்டியக் கலைஞர்களாக வலம் வருகின்றனர். என்னிடம் ஆறு முதல் அறுபது வரை நடனம் பயின்று வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் ஆரம்பித்தேன். ஆன்லைன் பயிற்சியினை இன்று வரை தொடர்ந்து வருகிறேன்.

நான் முதன் முதலில் பத்மஸ்ரீ தண்டாயுதபாணி பிள்ளை அவரிடம் தான் பயின்றேன். அதன் பிறகு கலைமாமணி சூர்யா சந்தானம் அவர்களிடம் பயிற்சி எடுத்தேன். இவரிடம் பயிற்சி எடுத்த போது, பல பிரபல நாட்டியக் கலைஞர்களுடன் சேர்ந்து ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அந்த சமயத்தில்தான் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

அவருடன் சேர்ந்து பல நாட்டியப் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறேன். எனது பரதநாட்டிய அரங்கேற்றம் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவும் எனக்கு மற்றொரு பெருமிதமான அனுபவம். ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற பிறகு நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில் மதுரை நாயகி நாட்டிய நாடகத்தில் பங்கு பெற்று ஆடினேன்.

நாட்டிய அனுபவம்…

எங்களது நாட்டியப் பள்ளி மூலம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா, தஞ்சாவூர் சின்ன மேளம் பெஸ்டிவல், மார்கழி உற்சவம், சிவராத்திரி விழாக்கள் என பலவற்றிலும் பங்கு பெற்று ஆடி வருகின்றனர் எங்களது மாணவர்கள். எனது நடன அமைப்பில் பாஞ்சாலி சபதம், அறுபடை வீடு, பஞ்ச வர்ண பரமன் போன்ற நாட்டிய நாடகங்களை அரங்கேற்றி உள்ளோம். ஆரம்ப நிலை பரதக்கலைஞர்களுக்கு உதவும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘அரிச்சுவடி’ என்ற புத்தகத்தினை எழுதி உள்ளேன். நடனக் கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களில் பரதக்கலை குறித்து வர்க்‌ஷாப்களும் நடத்தி வருகிறோம். இதில் மாணவர்கள், குடும்பத் தலைவிகள், கலை உலகினர், கார்ப்பரேட் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள்.

நாட்டியத்திற்கு வயது வரம்பு…

இதற்கு வயது வரம்பு எல்லாம் கிடையாது. நீங்கள் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் எந்த வயதிலும் நடனம் பயிலலாம். என்னிடம் ஆறிலிருந்து அறுபது வரை சிஷ்யர்கள் உள்ளனர் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் நடனப் பயிற்சியை சிறு வயதில் பயில வேண்டும் என்று விரும்பினால், அதற்கு ஆறு வயதுதான் சரி. என்றாலும், தற்போதைய சூழலில் எல்லா வயதி னரும் பரதக் கலையை ஆர்வமுடன் கற்றுக் கொள்ள முன் வருகின்றனர்.

ஏற்கனவே கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி சென்றவர்களும் மறுபடியும் கற்றுக்கொள்ள வருகின்றனர். அதே போன்று பிரசவத்திற்கு பிறகு நாட்டியம் கற்றுக்கொள்ள வரும் பெண்களும் உண்டு. தற்போது ஐம்பது வயதை கடந்தவர்கள் பலர் தங்களது உடல் நலனை மேம்படுத்த பரதம் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் வருகிறார்கள். இந்த பரதக்கலை நமக்கு எதையும் தரும் என்று சொல்லலாம். உடல் நலக்குறைவாக இருந்த காலகட்டத்தில் இந்த பரதக்கலை தான் என்னை மீண்டும் முழுமையாக மீட்டெடுத்தது. பரதமே எனது மூச்சு… பரதமே எனது உயிர்… சோகம், மகிழ்ச்சி, கோபம் என எல்லா உணர்வுகளுக்கும் நாட்டியம்தான் எனக்கான தீர்வாக இருந்திருக்கிறது. கவலை ஏற்பட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் நடனம் ஆடுவது சிறப்பான ஒன்று.

எதிர்கால கனவு என்ன?

தமிழ்நாட்டின் பெருமைமிக்க பண்பாடாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். வெளிநாடுகளிலும் பலர் நடனக்கலையை கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த பரதக்கலை அடுத்த தலைமுறைக்கும் சிறப்பாக கடத்தப்பட வேண்டும். மேலும் பலர் பரதக்கலையை கற்றுக் கொண்டு பயன் பெற வேண்டும். எங்களது மாணவர்கள் கடல் கடந்து இருந்தாலும், ஆன்லைன் மூலம் சுலபமாக கற்றுக்கொள்ள முடிகிறது. தற்போது உலகமெங்கும் பரதக்கலை குறித்த நல்ல புரிதல்கள் உள்ளது. இதுவே ஆரோக்கியமான விஷயம்தானே.

இந்த ஐம்பது வருட கலைப்பயணத்தில் ஏராளமான பாராட்டுகள், விருதுகள் எல்லாம் பார்த்து விட்டேன். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கையால் நாட்டிய கலா ரத்னா விருதை 1977ல் பெற்றேன். 2014ல் தென்னிந்திய சோஷியல் அண்ட் கல்ச்சர் பரதநாட்டிய திலகம் என்ற பட்டத்தை வழங்கியது.

அதே ஆண்டு நாட்டிய கலா சாரதி விருதும் கிடைத்தது. 2017ல் நிருத்ய சிரோன்மணி விருதினை பெற்றேன்’’ என்றார் ராஜேஸ்வரி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

 

The post முன்னாள் முதல்வருடன் நாட்டியம் ஆடினேன்! appeared first on Dinakaran.

Related Stories: