கோயில் சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் தம்பதியினர்!

நன்றி குங்குமம் தோழி

கோயில்களுக்கு கடவுளை தரிசிக்க சென்றாலும், அங்குள்ள தெய்வ சிலைகள், கோயிலின் கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் பார்ப்பவர் அனைவரையும் கவரும். அதற்கு முக்கிய காரணம் அதனை பல வண்ண நிறங்கள் கொண்டு அலங்கரித்து இருப்பார்கள். கோபுரத்தின் மேல் உள்ள சிற்பங்கள் முதல் கோயிலின் நுழைவாயில், ஆலயத்தின் கூரை என அனைத்திலும் அழகான நிறங்களால் பெயின்ட் அடிப்பது வழக்கம். அப்போதுதான் அந்தக் கோயில் என்றும் பிரகாசமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும்.

தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ள கோயில்களுக்கும் அழகிய வண்ணங்கள் பூசுவதோடு அதனை தயாரித்தும் வருகிறார்கள் மதுரையை சேர்ந்த லதா மற்றும் ஜெய்சங்கர் தம்பதியினர். இவர்கள் கடந்த 50 வருடமாக லட்சுமி பெயின்ட்ஸ் நிறுவனம் மூலம் கோயில் சிற்பங்கள் மற்றும் சிலைகளுக்காகவே பிரத்யேகமான பெயின்டுகளை தயாரித்து வருகிறார்கள்.

‘‘என்னுடைய சொந்த ஊர் விருதுநகர். நான் பிறந்தது மதுரையில்தான். என் தாத்தா பாகிஸ்தானில்தான் வசித்து வந்தார். அப்பா கராச்சியில் பிறந்தார், அங்கு தான் வளர்ந்தார். ஆரம்பத்தில் என் அப்பா தாத்தாவுடன் சேர்ந்து பருப்பு ஆலைதான் நடத்தி வந்தார். அதனால் தாத்தா, அப்பா என எல்லோரும் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தோம். பிறகு 1930ல் மதுரைக்கு வந்தவர்கள் இங்கு பெயின்ட் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் பெயின்ட் இறக்குமதி செய்து விற்பனை தொழிலில்தான் ஈடுபட்டு வந்தார்.

அதன் பிறகு 1974ல் சிறிய அளவில் பத்துக்கு பத்தடி அளவிலான சிறிய அறையில் பெயின்ட் தயாரிப்பு ஆலையை துவங்கினார். ஆரம்பத்தில் கைகளால் இயந்திரங்களை இயக்கி அதன் மூலமாகத்தான் பெயின்டினை உற்பத்தி செய்தார். காலப்போக்கில் தொழில்நுட்பங்கள் வளர, அப்பாவுடன் நானும் சேர்ந்து ப்ளாஷ் பஞ்சவர்ணம் மற்றும் மெடாலிக் பெயின்ட்களை தயாரிக்க ஆரம்பித்தோம்.

கடந்த 20 வருடமாக இந்த பெயின்ட்களைக் கொண்டு உலகம் முழுக்க உள்ள பல கோயில்கள் மற்றும் தெய்வ சிலைகள், சிற்பங்களுக்கு இந்த பெயின்ட் மூலம் உயிரோட்டம் அளித்து வருகிறோம். பள்ளிப் படிப்பு முடித்ததும், பெயின்ட் மற்றும் பிரின்டிங் டெக்னாலஜி குறித்து படித்தேன். அதன் மூலம் கோயில் சிலைகள் மற்றும் கோபுரங்களுக்கு எப்படிப்பட்ட வர்ணம் பூச வேண்டும், அது ஆண்டுகள் நீடிக்க பயன்படுத்தப்படும் டெக்னாலஜி குறித்தும் தெரிந்து கொண்டேன். இதற்கு வேதியியல் தெரிந்து இருக்க வேண்டும் என்றாலும், நான் அதனை பாடமாக படிக்காமல், அதற்கான அறிவினை என் தனித்திறமையால் வளர்த்துக் கொண்டேன்’’ என்றவர், தான் தயாரித்து வரும் பெயின்டின் சிறப்பம்சங்கள் குறித்து விவரித்தார்.

‘‘எங்க தயாரிப்பு நிறுவனம் மதுரை ஏர்போர்ட் அருகேதான் அமைந்துள்ளது. இங்கு சாதாரண பெயின்ட் மட்டுமில்லாமல், ஹைடெக்னாலஜி பெயின்ட்களையும் தயாரிக்கிறோம். அதனை கோயில்களுக்கு மட்டுமில்லாமல் வீடுகள், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தும்படி அமைத்து தருகிறோம். எங்களின் தயாரிப்பில் அனைவரும் விரும்புவது ப்ளாஷ் பெயின்ட். இதன் தனிச் சிறப்பே பெயின்ட் அடித்தால் அந்த வாடையே இருக்காது.

பெயின்ட் அடிக்கப்பட்ட சுவற்றில் தூசி அல்லது அழுக்கு பட்டாலும், கழுவினால் போதும். கரை நீங்கிடும். இதில் அனைத்து வண்ணங்கள் மட்டுமில்லாமல் கோல்டு, சில்வர், காப்பர் போன்ற நிறங்களும் தயாரிக்கிறோம். முன்பு பஞ்சவர்ணங்களை தயாரிக்க முட்டையின் வெள்ளைக்கரு, சலிக்கப்பட்ட மணல், குங்கிலியம், கடுக்காய் எல்லாம் சேர்த்துதான் வர்ணங்களை தயாரிப்பார்கள். இந்த வண்ணங்கள் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். நிறங்கள் மங்கிப் போகாது.

அதையே நாங்க தற்ேபாது ஜெர்மன் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, 14 நிறங்களை கொண்டு வந்திருக்கிறோம். இந்த 14 நிறங்களை ஒவ்வொன்றுடன் மிக்ஸ் செய்தால், அது வேறு நிறமாகும். அதன் மூலம் நாம் விரும்பும் நிறங்களை கொண்டு வரலாம். எங்களின் நிறங்கள் கொண்டு அலங்கரிக்கப்படும் சிற்பங்கள் பார்க்கும் போதே உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்க மிகவும் கவனமாக இருக்கிறோம்.

காரணம், கண்களைப் பறிக்கக்கூடிய வண்ணங்கள் கொண்ட சிற்பங்களை கோயிலுக்குள் நுழையும்போதே பக்தர்கள் பார்க்கும் போது, அவர்கள் மனதில் உற்சாகம், பாசிடிவ் எண்ணம், மனநிறைவு அனைத்தும் ஏற்படும். தற்போது எங்களிடம் 382 ஸ்தபதிமார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாட்டு கோயில்களில் சிற்பங்களை
உருவாக்க ஆர்டர் வந்தால், நாங்க இவர்களை பயன்படுத்திக் கொள்வோம். சிற்பங்கள் உருவாக்குவது மட்டுமில்லாமல், அதற்கான பெயின்ட் வேலைப்பாடுகளையும் நாங்களே பார்த்து செய்திடுவோம்’’ என்றவரின் மனைவியும் இந்தத் தொழிலில் ஈடுபட்ட விவரத்தைப் பற்றி கூறினார்.

‘‘பெண்களுக்கு ஒரு மகத்தான சக்தி உண்டு. ஒருவரைப் பார்த்த உடனே அவர்கள் பேசுவது மற்றும் நடந்து கொள்வதைப் பார்த்து அவர்கள் மனதில் நல்ல எண்ணத்துடன்தான் அணுகுகிறார்களா என்பதை கண்டறிந்துவிடுவார்கள். என் மனைவியும் அப்படித்தான். ஒரு சிலரைப் பார்த்து இவர்களுடன் தொழில் தொடர்பு வேண்டாம் என்று கூறினார். அவர் அப்படிச் சொல்லியும், நான் மலேசியாவை சேர்ந்த ஒருவருடன் பிசினஸ் செய்ய பணம் கொடுத்தேன். அவர் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு மாயமா மறைந்திட்டார். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு அவரைப் பிடித்து பணத்தையும் மீட்டோம்.

இருந்தாலும், அந்த நபரும் பணமும் கையில் கிடைக்கும் வரை டென்ஷனாகவே இருந்தது. அந்த நிகழ்விற்குப் பிறகு என் மனைவியிடமே அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டேன். இன்று வரை அவரின் மேற்பார்வையில்தான் இந்தத் தொழில் இயங்கி வருகிறது. மேலும் இந்தத் தொழிலுக்கு எனது மகன், மருமகள், மகள், மருமகன் என அனைவரும் ஒத்துழைத்து வருகிறார்கள்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ரங்கம், பழனி முருகன், சமயபுரம் மாரியம்மன், மதுரை சாய்பாபா கோயில், மயிலாடுதுறை கோயில், ரத்னகிரி முருகன் கோயில், அழகர் கோவில், உத்தரகோசமங்கை என பல பிரபல தமிழக கோயில்களில் எங்களின் நிறுவனத்தின் வண்ணங்கள்தான் பளிச்சிடும். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் லண்டன், மொரீஷியஸ், வியட்நாம், துபாய், சிங்கப்பூர், மலேசியா, சீனா, இலங்கை, தென்னாப்பிரிக்கா என வெளிநாட்டில் உள்ள கோயில்களுக்கு ப்ளாஷ் மற்றும் மெட்டாலிக் பெயின்ட் பயன்படுத்தி அந்த கோயில்கள் மற்றும் அங்குள்ள சிற்பங்களை மிளிர வைத்துள்ளோம்.

கோயில்கள் மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளின் அறைகளில் ஏசியின் தாக்கம் பல மணி நேரம் தக்க வைக்கக்கூடிய வர்ணங்களும் அடித்து தருகிறோம். வண்ணங்கள் மட்டுமில்லாமல் அதற்கான பிரஷ்களையும் நாங்களே தயாரிப்பதால், வண்ணம் அடிக்க ஆர்டர் கொடுத்தால் மட்டும் போதும். மற்ற அனைத்து வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்வோம்’’ என்றவர், அவரிடம் உள்ள சிறப்பு வண்ணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

‘‘எந்த ஒரு சிலை அல்லது சிற்பமாக இருந்தாலும், அதன் கண்கள்தான் மிகவும் முக்கியமானது. குறிப்பாக அம்மன் சிலைகளுக்கு கண்கள் நம்மைப் பார்ப்பது போல் இருக்க வேண்டும். அதற்கான தனிப்பட்ட வண்ணங்களை நாங்க கொடுப்போம். மேலும் எங்களின் பெயின்டுகள் அனைத்தும் அல்ட்ரா வைலட் புரொடெக்டர் கொண்டது. இதனால் சிலைகளுக்கு மேல் தூசி படிந்து வண்ணம் மங்கிப் போகாமல் காக்கும்.

அதே போல் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நாங்க பெயின்டினை தேர்வு செய்வோம். எங்களின் வேலைக்காக நாங்க பல விருதுகளை பெற்றிருந்தாலும், தொடர்ந்து வரும் வேலைகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்கால லட்சியம். மேலும் இந்த துறையில் விருப்பமுள்ள கல்லூரி மாணவிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகளை அளிக்கிறோம்’’ என்றனர் லதா மற்றும் ஜெய்சங்கர் தம்பதியினர்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post கோயில் சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் தம்பதியினர்! appeared first on Dinakaran.

Related Stories: