வெயிலை விரட்டும் ரெஃப்ரஷிங் பானங்கள்!

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும்… சூரியன் மற்ற இடங்களில் தன்னுடைய கதிர்களை விரித்து வெப்பத்தினை கக்கிக் கொண்டுதான் இருக்கிறது. வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தவுடனே ஜில்லென்று ஒரு பானம் பருக வேண்டும்… அட்லீஸ்ட் குளிர்ந்த நீராவது குடிக்க வேண்டும் என்றுதான் நம் மனம் ஏங்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் அதே சமயம் இழந்த எனர்ஜியினை மீட்கவும் புத்துணர்ச்சி குளிர் பானங்களை அறிமுகம் செய்துள்ளது ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் வேகன் உணவகமான ஈகோ லைஃப். இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி விவரித்தார் அதன் உரிமையாளர் ஜிங்கேஷ் புஜாரா.

“ஸ்டீல்‌ மற்றும்‌ இரும்புதான்‌ எங்க குடும்பத்‌ தொழில்‌. பூர்வீகம் குஜராத் என்றாலும் நாங்க 1960ல் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். இங்கு ஒரு ஹார்டுவேர் கடையினைதான் முதலில் அப்பா துவங்கினார். அது அப்படியே வளர்ந்து தற்போது நாங்க குடும்பமாக ஸ்டீல்‌ மற்றும்‌ இரும்பு பிசினஸில்‌ ஈடுபட்டு வருகிறோம்‌. எனக்கு உணவு மேல் தனிப்பட்ட ஈர்ப்புண்டு. அதனால் சென்னையில் ஒரு உணவகம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. முதலில் அமெரிக்க உணவு ஒன்றினை அறிமுகம் செய்தேன்.

ஆனால் இரண்டு வருடத்திற்கு மேல் அதனை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதில் கிடைத்த அனுபவத்தில் சோல்‌ கார்‌டன்‌ என்ற பெயரில் மல்டிகுசின் உணவகம் ஒன்றை துவங்கினேன். ஒரே இடத்தில் அனைத்து உணவுகள் கொடுப்பதிற்கு பதில் அதில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த உணவுக்காக மட்டுமே தனி உணவகம் அமைக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படி உருவானதுதான் ஈகோ லைஃப்‌.

இங்கு முழுக்க முழுக்க வேகன்‌ உணவுகளை மட்டுமே வழங்குகிறோம். மைதா, சர்க்கரை, பால்‌ மற்றும்‌ பால்‌ சார்ந்த தயிர்‌, நெய்‌, பனீர்‌ போன்ற உணவுகளுக்கு மாற்று உணவுகள்தான் வேகன் உணவுகள். அதாவது, மாட்டுப்பாலுக்கு பதில்‌ பாதாம்‌ மற்றும்‌ சோயா பாலினை பயன்படுத்துகிறோம். மைதாவிற்கு மாற்று கோதுமை அல்லது ரவை. பனீருக்கு பதில்‌ டோஃபூ. இப்படி ஒவ்‌வொரு உணவிற்கும்‌ மாற்று என்ன என்று அறிந்து அதை வழங்கி வருகிறோம்‌. இது காபி ஷாப்‌ கான்செப்ட் உணவகம் என்பதால் சாலட்ஸ்‌, பீட்சா, பாஸ்தா போன்ற உணவுகளையும் வேகன்‌ முறையில்‌ கொடுக்கிறோம்‌. இதன் வரிசையில் தற்போது வெயிலுக்காக நான்கு வகை ரெஃப்ரஷிங் பானங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்றவர் அது குறித்து விவரித்தார்.

‘‘பாஷன் பழத்தில் ஐஸ் டீ. டார்ஜிலிங் டீயினை தயாரித்து அதனை நன்கு குளிரச் செய்ய வேண்டும். அதில் பாஷன் பழத்தின் சாறினை சேர்த்து நன்கு கலக்கி கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் மற்றும் ஐஸ் க்யூஸ்களை சேர்த்து பரிமாறுகிறோம். எலுமிச்சை மற்றும் புதினா இலைகள் புத்துணர்ச்சியை தூண்டும். மேலும் பாஷன் பழமும் டீயும் மனதுக்கு ரிலாக்ஸினை அளிக்கும். அடுத்து ஸ்ட்ராபெர்ரி மெலன் ஹை, ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சாறுடன் தர்பூசணி பழத்தின் சாறு, எலுமிச்சை சாறு எல்லாம் கலந்து புதினா இலை கொண்டு அலங்கரித்து பரிமாறுகிறோம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பாஷன் மேங்கோ ஜிங்ஜர் மொஜிட்டோ, பாஷன் பழங்களின் சாறு உடன் மாம்பழச் சாறு மற்றும் எலுமிச்சை, இஞ்சி சாறு, இதில் பீச் ஃபிளேவர் கொண்ட ஸ்பார்க்கிளிங் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து புதினா இலை கொண்டு அலங்கரித்து தருகிறோம். இனிப்பு, புளிப்பு சுவையில் மூலிகை மகத்துவம் நிறைந்த பானம். குடிக்கும் போது ஒருவரின் சுவை உணர்வுகளுக்கு விருந்தளிப்பதை உணரலாம்.

கடைசியாக சிட்ரஸ் கோல்ட் ப்ரூ, இயற்கை முறையில் விளைவித்த காபிக் கொட்டையில் இருந்து டிகாஷன் எடுத்து அதனை இரவு முழுக்க குளிர வைத்து, உடன் ஆரஞ்ச் பழத் தோலின் துகள்கள் மற்றும் ஆரஞ்ச் பழ ஃபிளேவர் ஸ்பார்க்கிளிங் தண்ணீர் சேர்த்து பரிமாறுகிறோம். சிறிதளவு பருகியதுமே காபியின் சுவை உங்களை மெய்மறக்க செய்யும்’’ என்றவர் வரும் காலங்களில் அந்தந்த சீசனுக்கு ஏற்ப உணவுகள் மற்றும் பானங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

‘‘ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்த பானங்களைக்கூட மிகவும் கவனமாக எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் அமைத்திருக்கிறோம். இதில் சேர்க்கப்படும் பழச்சாறுகள் கூட செயற்கை எசன்ஸ் இல்லாமல் அந்த பழத்தில் இருந்தே எடுக்கப்படும் சாறுகளைதான் பயன்படுத்துகிறோம். கலப்படம்‌ இல்லாத ஆரோக்கிய உணவுகளை வழங்க வேண்டும் என் பதுதான் என் விருப்பம்” என்றார் ஜிங்கேஷ்.

தொகுப்பு: ஷன்மதி

The post வெயிலை விரட்டும் ரெஃப்ரஷிங் பானங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: