கேட்பவர்களை மயங்க வைக்கும் நாதஸ்வர இசை!

நன்றி குங்குமம் தோழி

கோயில் விழாக்களிலும், திருமண நிகழ்வுகளிலும் முக்கிய இசையாக வாசிக்கப்படுவது நாதஸ்வரம். இந்த இசையோடுதான் எல்லா சுப மங்கல நிகழ்வுகளும்
துவங்கும். குறிப்பாக நம் கலாச்சாரத்தில் மிக முக்கிய இசையாக நாதஸ்வரம் இருந்து வருகிறது. மேலும் ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த நாதஸ்வரத்தை தற்போது பெண்களும் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். அதில் ஒருவர்தான் மலேசியாவை சேர்ந்த அஞ்சலி கதிரவன். இவர் நாதஸ்வரத்தினை தனக்கென தனித்துவமாக குறிப்பாக திரையிசை பாடல்களையும் இதில் வாசித்து வருகிறார்.

‘‘நான் மலேசியா நாட்டுப் பெண். அப்பா, அம்மாவிற்கு பூர்வீகம் வேலூர்.என்னுடைய தாத்தா காலத்தில் வேலைக் காக மலேசியா வந்து இங்கு செட்டிலாயிட்டோம். என்னுடைய தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லோரும் நன்றாக பாடுவாங்க. அதனால நானும் என்னுடைய 7 வயதில் இருந்தே பாடல்கள் பாட தொடங்கினேன். நானும் அவர்களை போல் நன்றாக பாடுவேன். ஆனால் பாடல் கற்றுக் கொண்டு முழு நேர பாடகராக என் துறையை தேர்வு செய்ய எனக்கு விருப்பமில்லை.

அதனால் நான் இன்னமும் இசை குறித்து ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதே சமயம் எனக்கு இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டும் இருந்தது. அப்படித்தான் நாதஸ்வரம் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நாதஸ்வரம் கருவியை பெரும்பாலும் பெண்கள் அதிகமாக தேர்வு செய்ய மாட்டாங்க. இசை மீது ஆர்வம் உள்ள பெண்கள் வயலின், கிட்டார் என வேறு இசைக் கருவிகளை வாசிக்க சென்று விடுவார்கள். மேலும் மற்ற இசைக் கருவிகளை காட்டிலும் இந்த இசைக் கருவியை வாசிப்பதற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். காரணம், நாதஸ்வரம் வாசிக்கும் ேபாது வயிற்றில் இருந்து மூச்சினை தம் பிடித்து வாசிக்க வேண்டும். அதனால் வயிறு இழுத்து பிடித்துக் கொள்ளும். மேலும் அதிக நேரம் ஊதவேண்டும் என்பதால், கண்ணம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும். இதற்கு தினமும் குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் மூச்சுப் பயிற்சி செய்தால் மட்டுமே இந்தக் கருவியை வாசிக்க முடியும்.

இதனாலேயே நாதஸ்வரத்தினை அதிக அளவில் பெண்கள் தேர்வு செய்யமாட்டார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்த துறையினை ஏன் ஒரு பெண்ணாக நான் வாசிக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதனால்தான் நான் நாதஸ்வரம் கருவியை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான பயிற்சி குறித்து தேடிய போது, தமிழ்நாட்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இதற்கான படிப்பு இருந்தது குறித்து தெரிந்து கொண்டேன். வீட்டில் பெற்றோர்கள் சம்மதிக்க நான் இந்தியாவிற்கு பயணமாக ஆயுத்தமானேன்.

ஆனால் என் உறவினர்கள் எல்லோரும், இசையில் போதிய வருமானம் இருக்காது என்றார்கள். ஆனால் அப்பாதான் ‘உனக்குப் பிடித்த துறை எதுவோ அதையே தேர்வு செய்’ என்று எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவர் கொடுத்த தைரியத்தில் இந்தியாவிற்கு கிளம்பி வந்தேன்’’ என்றவர் நாதஸ்வரம் பயிற்சி பெற்றது மட்டுமில்லாமல் தற்போது பல கச்சேரிகளிலும் வாசித்து வருகிறார். ‘‘நாதஸ்வரத்தை மங்கல இசை என்று சொல்வார்கள். இதை தாய் கருவி என்று சொல்லலாம். இதற்கு பெருவங்கியம் என்ற பெயரும் உண்டு. நாதஸ்வரத்தில் இருந்து வரும் சத்தம் பல தூரத்திற்கு கேட்கும். அதனால் இதை வைத்து பலரும் கூட்டங்கள் கூட்ட பயன்படுத்தினர்.

அதன் பிறகு கோயில்களில் வாசிக்கத் தொடங்கினார்கள், அதனைத் ெதாடர்ந்து கச்சேரிகளிலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக திருமணங்களில் வாசிக்கக்கூடிய முக்கிய இசைக் கருவியாகத்தான் நாதஸ்வரமும் தவிலும் இருக்கிறது. இதில் பெரும்பாலும் கர்நாடக இசையை மையப்படுத்தி ஸ்வரங்கள் இருக்கும். கோயில்களில் கடவுளை தூங்க வைக்கவும், கோயில் நடை திறக்கும் போது என பல வைபவங்களில் வெவ்வேறு ராகங்களில் நாதஸ்வர இசை வாசிக்கப்படும். தேவாரம், திருவாசகமும் இதில் வாசிப்பார்கள்.

நாதஸ்வரத்தில் ஏழு துளைகள் இருக்கும். இதில் எந்த துளையின் வழியாக வாசித்தால் நாம் நினைத்த இசை வரும் என்பதுதான் சிறப்பம்சமே. குறிப்பாக நாம் வாசிக்கும் ஸ்வரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் நாதஸ்வர பயிற்சி எடுக்கும் முன் ஐ.டியில் படிப்பு முடிச்சிருந்தேன். பாட்டு பாட கற்றுக் கொண்டதால், மலேசியாவில் சில கச்சேரிகளில் பாடி இருக்கேன். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் நான் இந்தியாவில் என்னுடைய தனிப்பட்ட செலவுகளை பார்த்துக் கொண்டேன்.

காரணம், எங்களுடையது நடுத்தர குடும்பம். நாதஸ்வரம்தான் என்னுடைய முழுமையான பயிற்சி என்றாலும் முதலில் கர்நாடக சங்கீதம்தான் கல்லூரியில் சொல்லித் தருவார்கள். ஐந்தரை வருடங்கள்், இந்தியாவிலேயே தங்கி படித்தேன். படிக்கும் காலத்திலேயே மலேசியாவில் என் பெற்றோர்கள் மூலமாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நான் நாதஸ்வரம் வாசித்தேன். ஒரு பெண் நாதஸ்வரம் வாசிக்கிறாள் என பலரும் என்னை பார்த்து வியந்தது மட்டுமில்லாமல் நன்றாக வாசிப்பதாக பாராட்டினார்கள். அதனைத் தொடர்ந்து பல கச்சேரி மற்றும் நிகழ்ச்சியில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது’’ என்றவர் நாதஸ்வரத்தில் கர்நாடக இசை மட்டுமில்லாமல் திரையிசை பாடல்களையும் வாசிக்கத் தொடங்கியுள்ளார்.

‘‘கோயில்களில் மங்கல இசையும் கல்யாணத்தில் கெட்டி மேளமும் வாசிப்போம். அதனைத் தொடர்ந்து ‘ஆனந்தம் ஆனந்தமே…’ என்கிற பாடல் ஒன்றையும் வாசிப்பதுதான் எங்களின் வழக்கமாக இருந்தது. அதன் பிறகுதான் கர்நாடக இசை மட்டுமில்லாமல் திரை இசைப் பாடல்களையும் வாசிக்க துவங்கினேன். நாதஸ்வரத்தில் இன்னிசை பாடல்கள் வாசித்தால் கேட்பவர்கள் மெய் மறந்து விடுவார்கள். மற்ற பாடல்களை விட இன்னிசை பாடல்கள் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும்.

எல்லாவிதமான பாடல்களை வாசித்தாலும் மெலோடிஸ் பாடல்கள் வாசித்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அதனாலேயே நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினேன். அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் தான் என் பேவரைட்னு சொல்லலாம். அவர் தன் பாடலுக்கு இசை அமைக்கும் போது பலவித இசைக் கருவிகளை பயன்படுத்தி இருப்பார். அதை நான் நுணுக்கமாக கேட்கும் போது வியந்திருக்கிறேன்.

அவருடைய பாடல்களை வாசிக்கும் போது வாசிப்பவருக்கும் கேட்பவருக்கும் ஒரேவிதமான உணர்வை ஏற்படுத்தும். அவர் பாடலில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு…’ பாடல் வாசிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். திரை இசை பாடல்களில் அதன் ஸ்வரம் என்ன என்று தெரிந்து கொண்டால் போதும் நான் வாசித்திடுவேன்… தெரியாத பாடல்களுக்கு அதன் ஸ்வரங்களை வாசித்து பயிற்சி எடுத்துக் கொள்வேன்.

நான் ஆரம்பத்தில் வாசிக்கத் தொடங்கிய போது ஒவ்வொரு பாடல்களையும் என் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவேன். அப்படித்தான் நான் வெளி உலகுக்கு தெரிய தொடங்கினேன். எனக்கான வாய்ப்பும் என்னைத் தேடி வந்தது. பெண்களாலும் இந்த துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினேன். நாதஸ்வர இசையினை பல பெண்கள் கற்க முன் வரவேண்டும். அதற்காக நான் பயிற்சியும் அளிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். இது ஆண்களுக்கான இசை என பெண்கள் ஒதுங்கிட கூடாது. பெண்களாலும் ஆண்களுக்கு நிகராக வாசிக்க முடியும். அதனால் என்னை போலவே இந்த துறையில் பல பெண்களும் வர வேண்டும் என்பதே என் ஆசை’’ என்றார் அஞ்சலி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கேட்பவர்களை மயங்க வைக்கும் நாதஸ்வர இசை! appeared first on Dinakaran.

Related Stories: