வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் கவனிக்கவும்!

நன்றி குங்குமம் தோழி

சுற்றுலா விரும்பிகள் என்றால் அவர்கள் போகும் இடங்களே தனிப்பட்டு இருக்கும். அழகிய மலைத்தொடர், பல அம்சங்கள் நிறைந்த நகரப் பகுதிகள், வரலாறு நிறைந்த இடங்கள், சாகசத்திற்கும், முகாமிற்கும் ஏற்ற காடுகள் என பல பகுதிகளை சுற்றி வருவது அவர்களுக்குப் பிடித்தமான விஷயம். ஆனால், ஒவ்வொரு முறை இது போன்ற பயணத்தை மேற்கொள்ளும் போதும் நாம் கவனமாக இருப்பது அவசியம். சுற்றுலா செல்பவர்களில் இரண்டு வகை. ஒருவர் அனைத்தும் திட்டமிட்டு செயல்படுவார்கள்.

அப்படி திட்டமிட்டும் சில சமயம் ஏதாவது ஒரு முக்கியப் பொருளை எடுக்க தவறிவிடுவார்கள். அடுத்த ரகம், சுற்றுலா போக வேண்டும் என்ற சிந்தனை வந்தவுடனே எந்த ஒரு திட்டமின்றி கிளம்பிவிடுவார்கள். ஆனால் பலமுறை அதில் சிக்கல்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக நாம் நகரப் பகுதிகளுக்கு சென்றால் மறந்துவிட்டு வந்த பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திடலாம். ஆனால், காடுகள், மலைப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கையில் இதுபோல் நடந்தால் அவ்வளவுதான். நடுக்காட்டில் என்ன மாற்று ஏற்பாடு செய்வது? வனப்பகுதிக்கு அட்வென்சர் சுற்றுலா செல்பவர்களுக்கு சின்னச் சின்ன டிப்ஸ்…

*வனப்பகுதி, மலைப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிக்கு சுற்றுலா செல்வதற்கு முன் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்று அப்பகுதியின் கால நிலை. கோடை காலத்தில் இது போன்ற
பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது மேலும் சிறப்பு. மழைக் காலத்தில் செல்வதாக இருந்தால் தகுந்த முன்னேற்பாடுடன் செல்ல வேண்டும்.

*கோடை காலத்தில் வனப்பகுதிக்குள் செல்கையில் சில சமயம் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வைகள் வெளியேறி சோர்வடையச் செய்வது வழக்கம். காட்டன் உடை அணிவதால் இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும், அடர் நிறமான பச்சை, சாம்பல், கறுப்பு போன்ற நிறங்களில் உடைகள் அணிவது நல்லது. இதுபோன்ற அடர் நிற ஆடைகள் மரங்களின் நிறத்துடன் ஒத்துப்போவதால் விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

*மழைக் காலத்தில் இது போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது காலில் ஷூக்கள் அணிவது கட்டாயம். மேலும், முழுக் கை ஆடை, தலைக்கு தொப்பி உள்ளிட்டவற்றை அணிய வேண்டும். ஏனெனில், மழைக் காலத்தில் அல்லது மழை பெய்து முடிந்த சில காலத்தில் காட்டுப் பகுதியில் அதிகளவிலான அட்டைப் பூச்சிகளும், விஷப்பூச்சிகளும் பெருகியிருக்கும். அவற்றிடம் இருந்து நம் உடலை பாதுகாக்க இது போன்ற ஆடைகள் உதவும்.

*பயணத்தை தொடங்கும் முன்பாக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பொருட்களிலும், துணியிலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையின்றி அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்வது வீண் சிரமத்தை உண்டாக்கும். மேலும், தண்ணீர் பாட்டில்கள், முதலுதவிக்கு தேவையான மருந்துகள் மற்றும் காடுகளில் தங்க தேவையான பாதுகாப்பு பொருட்கள் உதாரணத்திற்கு டார்ச் லைட், தீப்பெட்டி போன்றவற்றை எடுத்துச் செல்லலாம்.

*காட்டு வழியில் வாகனத்தில் பயணிக்கும் போது தேவையின்றி அதிகப்படியான சத்தத்தை எழுப்ப வேண்டாம். குறிப்பாக வாகனத்தின் ஹாரனைக் அடிக்கடி அழுத்தக்கூடாது. இவை, காட்டுச் சூழ்நிலையை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளது. சில சமயங்களில் விலங்குகளின் கவனத்தை ஈர்த்து நம்முடைய பயணத்திற்கு இடையூறாக மாறும். எல்லாவற்றையும் விட காட்டுப் பாதையில் வாகனத்தை இடையே நிறுத்தி கீழே இறங்குவதை தவிர்ப்பது நல்லது.

*வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது தேவைக்கும் அதிகமாகவே உணவுகளை எடுத்துச் செல்வது அவசியம். எடுத்துச்செல்லும் உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெடாதவாறும், அதே சமயம் உடல் உபாதைகள் ஏற்படுத்தாத உணவுகளாக இருக்க வேண்டும். வனப்பகுதியில் கிடைக்கும் நமக்கு அறிமுகமில்லாத எந்த ஒரு காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: பிரியா மோகன்

The post வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் கவனிக்கவும்! appeared first on Dinakaran.

Related Stories: