சிறுகதை-உறவு முத்திரை

நன்றி குங்குமம் தோழி

நான் இந்திரன். எம்.எஸ்.ஸி பட்டதாரி. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி, லட்சத்திற்கு அருகில் சம்பளம் வாங்கும் 31 வயது வாலிபன். எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாத ஆரோக்கியமான உடல் வாகு அமைந்த கலரான கட்டிளங்காளை. அப்பா, அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் உடுமலைப்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார்கள். எங்கள் வீட்டிற்கு நான் ஒரே ஒரு பையன்.

கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் எனக்கு பெண் தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் இதே நிபந்தனையுடன் நெல்லை மாவட்டம் ஆம்பூரில் பிச்சம்மாள் என்ற பெண்ணை பார்த்து முடிவு செய்து விட்டார்கள். இருவரின் ஜாதகப்படி திருமணம் மூன்று மாதங்கள் கழித்துதான் நடத்த வேண்டுமெனக் கூறிவிட்டார்கள். திருமண நிச்சயதார்த்தம் ஒரு மாதம் கழித்து நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. நான் சென்னையில் வங்கியில் பணியாற்றி வருகிறேன். மாம்பலத்திலுள்ள ஒரு அபார்ட்மென்டில் இருந்து வருகிறேன்.

ஸ்டாம்பு ஒட்டப்படாத ஒரு கவர் எனது பெயருக்கு வந்திருந்தது. ஸ்டாம்பு ஒட்டப்படாத காரணத்தினால் ஃபைன் கட்டி கவரைப் பெற்றுக் கொண்டேன். கவரின் மேல் பகுதியில் “அவசியம் அவசரம்” என எழுதப்பட்டிருந்தது. அலுவலக வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த பிறகு கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன். “வெகு விரைவில் பிச்சம்மாள் என்கிற பெண்ணை மணக்கப்போகும் இந்திரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவள் அகல் விளக்கல்ல.

அனைவரையும் அணைக்கும் விளக்கு. திருமணத்திற்கு முன்பு பெண்கள் மோசமாக இருக்கலாம் தப்பில்லை. ஆனால் மாசமாகத்தான் இருக்கக் கூடாது என பட்டிமன்றத்தில் வீரமுழக்கம் பேசியவள் ஆண்கள் இரு தாரம் முடிக்கும்போது பெண்களாகிய நாம் ஏன் இரு கணவர்களை மணமுடிக்க கூடாதா? என புதுமையான கருத்தைச் சொன்னவள். எதிர் வீட்டில் கே.ஆர்.வி. நாதன் என்ற கல்லூரி பேராசிரியர் வீடு உள்ளது.

நீங்கள் மணமுடிக்கப் போகும் பிச்சம்மாள் முழுக்க முழுக்க அங்குதான் இருப்பாள். குழந்தையில்லாத அவருக்கும் உங்கள் வருங்கால மனைவிக்கும் தவறான தொடர்பு உண்டு. நீங்கள் அவளை மணமுடித்தால் உங்கள் வாழ்க்கை சூனியமாகி விடும். நீங்கள் அவளை விட்டு விலகினால்தான் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். மொட்டைக் கடிதம் என நிராகரித்து விடாதீர்கள்.”கடிதம் முழுவதும் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. மனதிற்குள் ஒரே குழப்பமாக இருந்தது. நம்புவதா? வேண்டாமா? என்ற சிந்தனை எனது மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டேயிருந்தது. நேரடியாக ஊருக்குப் போய் அவளைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் நல்லது என முடிவு செய்தேன்.

ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு கிளம்பத் தொடங்கினேன். பக்கத்து வீட்டுக்காரரிடம் ‘‘நான் அவசரமாக நெல்லை செல்கிறேன். என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைத் தேடி வருவாங்க. அவங்க வந்தா வீட்டு சாவியைக் கொடுங்க’’ என்றேன்.உடனே பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் “சார் நீங்க நெல்லைக்குப் போறீங்களா? எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என கெஞ்சும் குரலில் ேகட்டார். சொல்லுங்க சார் செய்யுறேன் என்றேன். என் அக்கா மகளுக்கு சடங்கு. ஊருக்கு போறதுக்கு வாய்ப்பில்லை. இந்தப் பையிலே பத்து பவுன் செயின் இருக்கு. கருங்குளத்தில் என் அண்ணன் இருக்கார். நீங்க நெல்லை போனவுடன் போன் செய்யுங்க. நகையை வாங்க உங்களை தேடிவருவார்’’ என்றார். ‘‘கொண்டாங்க சார்’’ என வாங்கி பிரிப்கேசுக்குள் வைத்துக் கொண்டேன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பும் சென்னை To நாகர்கோவில் டூரிஸ்ட் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். பக்கத்து சீட் காலியாக இருந்தது. ‘‘பக்கத்துச் சீட்டில் தாம்பரத்தில் ஒருவர் ஏறிக்கொள்வார் சார்’’ என்றார் கண்டக்டர். தாம்பரத்தில் பஸ் நின்றது.அட்டகாசமான கறுப்பு நிறத்தில் வழுக்கைத் தலையுடன் நாற்பது வயதுக்காரர் மேலே ஏறி வந்தார். என் பக்கம் வந்து “உங்களது பக்கத்தில்தான் எனக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் கூறிக்கொண்டே கையை குலுக்கினார்.

‘‘சார், என்னோட பெயர் முத்தையா. சொந்த ஊர் கோவை மாவட்டம் வால்பாறை சார். அங்கே நான் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக இருக்கேன். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன் சார். இப்போ நான் வெளியூர் போறேன். அங்கே என்னோட அப்பா வீட்டை விலைக்கு வித்துட்டேன். ஐந்து லட்சம் ரூபாய் வாங்கத்தான் போறேன். நீங்க திருநெல்வேலியில இறங்கப் போறதாக கண்டக்டர் சொன்னார். நீங்க காலையிலே நெல்லையிலே இறங்கும்போது நான் நல்லா தூங்கிட்டு இருப்பேன். இந்தாங்க சார் என்னோட விசிட்டிங் கார்டு. வால்பாறைக்கு வந்தா என்னை பார்க்க வாங்க. சார் எங்கிட்டே ஒரு பழக்கம்.

முதல் முதலா யாரைப் பார்த்தாலும் என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்திருவேன். தப்பா நினைக்காதீங்க…’’ கலகலவென்ற அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.
பஸ்சுக்குள் அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டார். நான் எனது வருங்கால மனைவியின் நடத்தையை பற்றியே மொட்டைக் கடிதத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்ததால் எனக்கு
தூக்கமே வரவில்லை.காலை நான்கு மணிக்கு டூரிஸ்ட் பஸ் நெல்லை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. எனது சூட்கேசையும் பிரிப்கேசையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினேன். பக்கத்து சீட்காரர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சொல்லாமல் வந்து விட்டேன். ஆட்டோ பிடித்து ஜங்சனிலுள்ள ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினேன். இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் களைத்துப்போய் அமைதியாக தூங்க ஆரம்பித்தேன்.

சரியாக காலை 10 மணிக்கு எனது செல்போன் அலறியது. எடுத்து ‘‘யார் சார்’’ என்றேன். ‘‘சார் பஸ்ஸூல உங்க கூட ஒண்ணா வந்த முத்தையா பேசுறேன் சார். சார் நீங்க என்னோட பிரிப்கேசை மாற்றி எடுத்துட்டு போயிட்டீங்க. உங்க பிரிப்கேஸ் எங்கிட்ட இருக்கு. உள்ளே ஒரு தங்கச் சங்கிலி இருக்குது. நீங்க எங்ேக இருக்கீங்க? நான் உங்க பிரிப்கேசை அங்கே கொண்டு வர்றேன்…’’நான் திடுக்கிட்டுப் போனேன். நல்ல வேளை நகை திரும்பக் கிடைத்துவிட்டது.

‘‘மனசு குழப்பத்தில் ஒரே பதட்டமாகி பிரிப்கேசை மாத்தி தூக்கிட்டு வந்துவிட்டேன். சார் ஹோட்டல் ஆர்யாஸில் ரூம் நம்பர் 203ல் இருக்கேன்…’’‘‘சரி சார்… நான் சாயங்காலம் வர்றேன் சார்…’’ அப்பாடா நகை கிடைத்து விட்டது. இப்போதுதான் மனதுக்கு திருப்தியாக இருந்தது. மாலை 5 மணிக்கு முத்தைய எனது பிரிப்கேசுடன் ரூமுக்குள் வந்தார். ‘‘சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். இது என்னோட நகை இல்ல சார். இன்னொருவர் நகை சார்.

சாயங்காலம் அவர் என்னை தேடிவருவார். அவர்கிட்ட இதை கொடுக்கணும்…’’ இருவரும் பேசியவாறே ரூமுக்கு வெளியே வரண்டாவிற்கு வந்தோம். வரவேற்பு அறையில் கணவன், மனைவி இரண்டு பேர் ரூம் புக்கிங் செய்ய நின்று கொண்டிருந்தார்கள். ‘‘சார் அவங்க ஜோடிப் பொருத்தம் எப்படி’’ என்றார் அவர். ‘‘ரெண்டு பேரும் நல்ல கலர்… ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்கு சார்’’ என்றேன்.

‘‘சார், அவங்க ஊரை விட்டு ஓடி வந்து விட்டாங்க சார். நான் அவங்க கண்ணுல பட வேண்டாம். ரூமுக்குள்ளே வாங்க சார் அவங்க கதையை நான் சொல்லுறேன். சார் அந்தப் பொண்ணு பேர் கோமதி. அப்பா, அம்மா இல்லாத பொண்ணு சார். அவங்க அத்தைதான் சார் அவளை வளர்த்தாங்க. அந்த அத்தைக்கு ஒரு பையன் சார். அந்தப் பையன் அவள் மீது உயிரையே வைச்சிருந்தான். பையனுக்கு சரியாக படிப்பு வரலே. அந்தப் பொண்ணு நல்லா படிச்சாள். அவளை அத்தை நல்லா படிக்க வைச்சு தன்னோட பையனுக்கு கட்டி வெச்சிட்டாள்.

தனக்கு ஆதரவு கொடுத்த அத்தை சொல்லை மீற முடியாமல் கல்யாணத்திற்கு சம்மதிச்சுட்டாள். அவளுக்கு தனது அத்தை மகன் மீது கொஞ்சம் கூட விருப்பமில்லை. அந்தப் பையன் கறுப்பு சார். கோமதி கர்ப்பமானாள். தனக்கு பிறக்கப்போகும் குழந்தை கறுப்பாகத்தான் பிறக்கும் என்ற அவநம்பிக்கையில் கர்ப்பத்தை கலைச்சுட்டாள். அவளோட புருசன் நொறுங்கிப் போயிட்டான்.

இதற்கிடையே சேலை வியாபாரி ஒருவர் அந்த ஊருக்கு வந்தான். வாரா வாரம் சேலை விற்க வருவான். அவங்க ரெண்டு பேருக்கும் தவறான உறவு ஏற்பட்டுப் போச்சு. கணவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேக்கலை சார். இப்போ ரெண்டு பேரும் ஊரை விட்டு வந்துட்டாங்க சார். அவளோட வந்திருக்கிறது சேலை வியாபாரி சார். ரெண்டு பேரும் புது வாழ்க்கை வாழப் போறாங்க சார். நல்லா இருக்கட்டும் சார். கணவன் கிட்டே கிடைக்காத சுகம் அவளோட காதலன் கிட்டேயாவது கிடைக்குதே! சார்…’’“அவர் புருசன்கிட்டே சொல்லி தடுத்து நிறுத்துவோம் வாங்க. போலீசுக்கு போய் தடுத்து நிறுத்துவோம். அவரோட நம்பர் சொல்லுங்க. உடனே அவரை வரவழைப்போம்”
என்றேன்.

‘‘கீழே நிற்கிற கோமதியோட புருசன் வேற யாருமில்ல… அந்த அப்பாவி புருசன் நான்தான் சார்’’ என அவர் சொன்னார். நான் அதைக் கேட்டதும் திடுக்கிட்டு போனேன். தனது கண் முன்னே தனது மனைவி இன்னொருவனுடன் ஓடப் போகிறாள் என தெரிஞ்சும் கூட உணர்ச்சிவசப்படாமல் நன்றாக இருக்கட்டும் என வாழ்த்துகிறானே எவ்வளவு பெரிய மனசு. அவனது கைகளை பிடித்து முத்தம் கொடுத்தேன்.திரும்ப அவன் என்னுடன் பேசத் தொடங்கினான். கண்களில் சாரை சாரையாக கண்ணீர். தழுதழுத்த குரலில் சொன்னான் ‘‘நான் கிளம்புறேன் சார்.

சார் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். இதுல வீடு விற்ற காசு அஞ்சு லட்சம் ரூபாய் இருக்கு. இதை நீங்க என்னோட மனைவிக்கிட்ட கொடுத்திருங்க…’’அங்கு கிடந்த ஒரு தாளில் எழுதினான்.“இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கப் போகும் உனக்கு எனது இனிய வாழ்த்துகள். இத்துடன் அஞ்சு லட்ச ரூபாய் இருக்குது. உனக்கு நான் கொடுக்கும் திருமண பரிசு.
உங்கள் உறவு முத்திரை உறுதியாக இருக்க என்னுடைய வாழ்த்துகள்…” வாழ்க வளமுடன். உனது மாஜி புருசன் முத்தையா.

தான் பொருத்தமானவன் இல்லை எனத் தெரிந்ததும் தனது மனைவியை இன்னொருவனுக்கு தாரை வார்த்து கொடுக்கும் கணவன் எவ்வளவு நல்லவன்.சிறிது நேரம் கழித்து எனது வருங்கால மனைவி எனக்கு போன் செய்தாள். ‘‘என்னைப் பற்றி அவதூறாக ஊரிலுள்ள எல்லா சுவற்றிலும் தப்பு தப்பா எழுதிப் போட்டிருக்காங்க. அதை உங்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு நூறு சதவீதம் நம்பிக்கையிருந்தால் மட்டுமே நமது கல்யாணம் நடக்கும். நான் உங்களுக்கு யோசிக்க ஒரு மாதம் அவகாசம் தருகிறேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே’’ என்றாள்.

வாட்ஸப் செய்தியை பார்த்தேன். சுவரில் கண்ணியக் குறைவாக பெயின்டால் எழுதப்பட்ட வாசகம் “தலையாட்டி கே.ஆர்.வி. நாதனுக்கும் எதிர் வீட்டு பிச்சம்மாளுக்கும் என்ன தொடர்பு?’’ நான் அவளுக்கு திரும்ப போன் செய்தேன். திருமண நிச்சய தார்த்தம் அடுத்த வாரம். திருமணம் அதற்கு அடுத்த வாரம்.எனக்கு வந்த மொட்டைக் கடிதத்தை தூள்தூளாக்கி கிழித்து காற்றில் பறக்க விட்டேன். இப்போது எனது மனதில் எவ்வித குழப்பமும் இல்லை.

தொகுப்பு: எம்.சமுத்திரபாண்டியன்

The post சிறுகதை-உறவு முத்திரை appeared first on Dinakaran.

Related Stories: