புதிய அணை என்பது கேரள அரசின் சூழ்ச்சி: சட்டப் போராட்டத்தைத் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை

சென்னை: முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை என்ற கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பணியக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் இந்திய ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிகேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆங்கிலேயப் பொறியாளர் மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முல்லை பெரியாறு அணை மூலம் நீராதாரம் பெற்று வருகிறது. இந்த அணையால் 5 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லை பெரியாறு அணை உள்ளது.

விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியை கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. இருப்பினும் 1970ம் ஆண்டு கேரளாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் நிலத்தையும், நீரையும் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிலவரிப்பணமாக ரூபாய் 2.5 லட்சமும், மின்உற்பத்திக்கான உபரி வரிப்பணமாக ரூபாய் 7.5 லட்சமும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு செலுத்திவருகிறது. அணையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் உரிமை தமிழ்நாடு அரசின் வசம் இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது.

அணைப் பாதுகாப்பையும், தமிழ்நாடு அரசின் அணையைப் பாதுகாக்கும் உரிமையையும் உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று பொய்ப்பரப்புரையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபடுவதும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாதபடி தடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. அதன் நீட்சியாகவே தற்போது, முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள வண்டிபெரியாறு பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கும், தற்போதுள்ள அணையை இடிக்கவும் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதிகேட்டு கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.

கேரள மாநிலத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய விளைபொருட்களை தென் தமிழ்நாட்டு விவசாயப் பெருமக்களே விளைவித்து தரும் நிலையிலும், அதனை உணராது முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதில் கேரள மாநில அரசு தீவிரம் காட்டுவது சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும். ஆகவே, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

The post புதிய அணை என்பது கேரள அரசின் சூழ்ச்சி: சட்டப் போராட்டத்தைத் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: