சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி பிளாஸ்டிக் வியாபாரிகள் மே 31ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மாசு கட்டுபாடு வாரியம் அறிவிப்பு

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி பிளாஸ்டிக் வியாபாரிகள் மே 31ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாசு கட்டுபாடு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்திய விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான ‘விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (இபிஆர்) இணைதளம் பற்றிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களின்படி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தர அடையாள உரிமையாளர்கள், பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சியாளர்கள் – கையாள்பவர்கள் புதிய வழிகாட்டுதல்களின்படி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் இந்த இணையத்தில் பிளாஸ்டிக் உரிமையாளர்கள், பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக வலியுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருகிற 31ம் தேதிக்குள் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான மையப்படுத்தப்பட்ட, விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு தளத்தில் பிளாஸ்டிக் பேக்கேஜிங் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தர அடையாள உரிமையாளர்கள், மறுசுழற்சியாளர்கள், கையாள்பவர்கள் முழுமையான விவரங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அதனை பின்பற்றாததற்காக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து பிளாஸ்டிக் உரிமையாளர்கள், பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் தங்கள் ஆண்டு அறிக்கையை இணையதளத்தில் மே 31ம் தேதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். இதுபற்றிய விவரங்களுக்கு 9500076438 மற்றும் pwmsec@tnpcb.gov.in-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி பிளாஸ்டிக் வியாபாரிகள் மே 31ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மாசு கட்டுபாடு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: