தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

*கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர் பங்கேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படை சார்பில் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையின் மண்டல அளவிலான பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. குறிப்பாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது, கப்பலில் உள்ளவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும், நடுக்கடலில் விமானம் விழுந்தால் எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது, காணாமல் போனவர்களை எப்படி கண்டுபிடிப்பது போன்ற தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படையின் கமாண்டர் டி.எஸ்.சவுகான் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையார் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் கடலோர காவல் படையில் உள்ள வஜ்ரா, வைபவ், ஆதேஷ், அபிராஜ், அதுல்யா ஆகிய 5 ரோந்து கப்பல்களும், ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் பங்கேற்றன.

அப்போது, தூத்துக்குடி கடற்கரையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நின்ற ஒரு சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அறிந்த கடலோர காவல்படை ரோந்து கப்பல் விரைந்து சென்று, கப்பலில் உள்ள மோட்டார் மூலம் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதேபோல் நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தால், எப்படி மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும், ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர், கப்பல்கள் செல்ல முடியாத பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடிய மீட்பு படகை செலுத்தி தத்தளிப்பவர்களை மீட்பது, கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவரை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி மீட்பது குறித்தும் ஒத்திகை பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை டிஎஸ்பி பிரதாபன், இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: