ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா

*ஏற்றுமதியாளர் சங்கம் ஒன்றிய அமைச்சரிடம் மனு

வேலாயுதம்பாளையம் : ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர் சங்கம் ஒன்றிய அமைச்சரிடம் மனு அளித்தனர்.
கரூர் ஜவுளி ஏற்றுமதி சங்கத்தினர் வரும் 2030 ம் ஆண்டு 25 ஆயிரம் கோடி ஏற்றுமதி இலக்கு பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மத்திய அரசின் புதிய ஜவுளித்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சருடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன், செயலாளர் சேதுபதி ஆகியோர் புதிதாக பதவியேற்றுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசில் ஜவுளித்துறை அமைச்சர் அமைச்சர் கிரிராஜ் சிங் , அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பபித்ரா மார்கரிட்டா ஆகியோருக்கு ஜவுளி ஏற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அகில இந்திய அளவில் ஜவுளி துறை சார்ந்த அமைப்புகளுடன் கலந்துரையாடல் செய்யும் நோக்கத்தில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் சேதுபதி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு கரூர் ஜவுளி துறை பற்றிய விளக்கமான அறிக்கை வழங்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது, கரூர் மாநகரில் சுமார் 800 சிறு ,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒன்பதாயிரம் கோடி அளவிற்கு ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றன. இதில் ரூ.6000 கோடி அளவிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரூரில் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு நேரிடையான வேலை வாய்ப்பும், 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மறைமுகமான வேலை வாய்ப்பு கரூர் ஜவுளித்துறை மூலமாக வழங்கப்படுகிறது.

மேலும் 2030 ம் வருடத்திற்குள் ரூ.25 ஆயிரம் கோடி வர்த்தகத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு கரூர் ஜவுளித்துறை சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கும். இந்த வளர்ச்சியை பெறுவதற்கு தேவையான உட் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு தேவையான திட்டங்கள், சுத்திகரிப்பு மையம், சாயம் பற்றிய தொழில்நுட்பம், தொழிலாளர்களுக்கு பயிற்சி, வேலை பகிர்வு முறை உள்ளிட்ட வசதிகள் என்ன என்பதை மத்திய அமைச்சர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

உலக சந்தையில் கரூர் ஜவுளி நிறுவனங்கள் நிலை நிறுத்திக் கொள்வதற்கு பரிவர்த்தனை செலவுகளை குறைக்க வேண்டியது அத்தியாவசியம். ஒருங்கிணைந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் மூலம் பரிவர்த்தனை செலவுகளை குறைக்க முடியும்.எனவே பிரதம மந்திரியின் மெகா டெக்ஸ்டைல் பார்க் திட்டம் போல சிறிய அளவிலான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா கரூரில் அமைக்கப்பட வேண்டும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் ஸ்பின்னிங் வீவிங் டையிங் ஸ்டிச்சிங் பினிஷிங் என அனைத்து ஜவுளி துறை சார்ந்த தொழில் நிறுவனங்களும் அமைக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடுகளும் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கரூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் இல்லாத காரணத்தினால் புதிய சாயம் மற்றும் சலவை பட்டறைகள் தொடங்கப்படுவது இயலாத செயலாக உள்ளது, இது கரூர் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய ஒரு தடை இந்த தடையை நீக்குவதற்கு மேற்கண்ட ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம் ஒரு தீர்வாக இருக்கும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

கரூர் மாநகரை கோயம்புத்தூருக்கும் திருச்சிக்கும் இணைக்கும் சாலைகள் ஆறு வழிச்சாலைகளாக அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது.
கோரிக்கையை பெற்றுக் கொண்ட ஜவுளித்துறை அமைச்சர் இணை அமைச்சர் கரூர் மாநகருக்கு விரைவில் வருகை புரிந்து கரூர் ஜவுளித்துறை பற்றி மேலும் தெரிந்து கொண்டு கருவூருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் புதிய திட்டங்கள் வடிவமைத்து உறுதி அளித்துள்ளனர்.

The post ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: