சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்தாமரைகுளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூன் 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்றத்தின்போது அய்யா சிவ…சிவ… அரகரா… என்று பக்தி கோஷமிட்டனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, அய்யாவழி சமயசொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கின்றன.
2ம் நாள் திருவிழாவான இன்று (25ம் தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், 3ம் நாளான 26ம் தேதி இரவில் அன்ன வாகனத்திலும், 4ம் நாள் (27ம் தேதி) பூஞ்சப்பர வாகனத்திலும், 5ம் நாள் (28ம் தேதி) அய்யா பச்சை சாத்தி அன்ன வாகனத்திலும், 6ம் நாள் (29ம் தேதி) கற்பக வாகனத்திலும், 7ம் நாள் (30ம் தேதி) சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் பவனி வருதல் நடக்கிறது.

8ம் நாள் திருவிழாவான 31ம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிக் கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது. 9ம் நாள் திருவிழா (ஜூன் 1ம் தேதி) அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதலும், 10ம் நாள் திருவிழா (ஜூன் 2ம் தேதி) இந்திர விமான வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும். இதையடுத்து திருவிழாவின் முக்கிய நாளான 11ம் நாள் திருவிழா (ஜூன் 3ம் தேதி) அன்று நண்பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளி வீதி வழியாக செல்லும் தேரோட்டம் நடைபெறுகிறது. அத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

The post சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: