சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகி கைது!

சென்னை: சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். மாஜர்கான் என்பவரிடம் ரூ.4 லட்சம் கடனுக்கு ரூ.8 லட்சம் வாங்கியதுடன், மீண்டும் ரூ.9.5 லட்சம் கேட்டு மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. புளியந்தோப்பு 3வது தெருவில் வசித்து வருபவர் மாஜர்கான் (44). இவர், வீடு வாடகைக்கு பிடித்துக் கொடுப்பது, வீடுகளை வாங்கி விற்பது உள்ளிட்ட தரகர் வேலை செய்து வருகிறார். இவர், தனது குடும்ப செலவுக்காக, புளியந்தோப்பு நரசிம்மநகர் 5வது தெருவை சேர்ந்த அஞ்சலை (48) என்பவரிடம், கடந்த வருடம் நவம்பர், வட்டிக்கு ரூ.4 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

இதற்கு வட்டியுடன் சேர்த்து, ரூ.8 லட்சம் வரை கட்டியுள்ளார். இருப்பினும் அஞ்சலை மேலும் தனக்கு ரூ.9.50 லட்சம் தரவேண்டும் என கேட்டு அடிக்கடி மாஜர்கானை மிரட்டி வந்துள்ளார். மாஜர்கான் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், மாஜர்கான் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் மாஜர்கான் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், புளியந்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே அஞ்சலை மீது புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அஞ்சலை பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட மகளிரணி துணை தலைவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான அஞ்சலையை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகி கைது! appeared first on Dinakaran.

Related Stories: