கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் துளிர்விடும் மா மரங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விவசாயத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக போச்சம்பள்ளி தாலுகா, மா விளைச்சலில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் போதிய மழை பெய்யவில்லை.
மேலும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையில், நீர் நிலைகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் குறைந்தது. கடும் வறட்சி காரணமாக மா மரங்கள் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளித்தது. இதனால், மா விளைச்சல் பாதிக்கப்பட்டு, மாங்காய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. பல பகுதிகளில் கடும் வெயிலுக்கு நூற்றுக்கணக்கான மா மரங்கள் காய்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நேற்று நிலவரப்படி, முழு கொள்ளளவான 52 அடியில், 43.95 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து 504 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் காய்ந்து போன மா மரங்கள் மீண்டும் துளிர் விட தொடங்கியுள்ளதால், மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் துளிர்விடும் மா மரங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: