என் உடல்நிலை பற்றி பொய் பரப்பும் பாஜ: ஒடிசா முதல்வர் பட்நாயக் வேதனை

புவனேஸ்வர்,மே 25: எனது உடல்நிலை குறித்து பாஜ தலைவர்கள் பொய்யை பேசுகின்றனர் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நவீன் பட்நாயக்குக்கு வயதாகி விட்டது. அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நவீன் பட்நாயக் சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வெளியிடப்படுகிறது என பேசினர்.

பாஜ தலைவர்களின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவீன் பட்நாயக்(77)நேற்று கூறுகையில், ‘‘மக்களிடம் பொய்களை அவிழ்த்து விடுவதற்கும் ஒரு எல்லை உண்டு. நான் நல்ல உடல் நிலையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். பல மாதங்களாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக கூறும் பாஜ தலைவர்கள், உங்களுடைய சொந்த அறிவை பயன்படுத்த வேண்டும்’’ என கேட்டு கொண்டார். நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவரும் பிஜூ ஜனதா தள (பிஜேடி) மூத்த தலைவருமான வி.கே.பாண்டியன்,‘‘ பாஜ தலைவர்களின் இத்தகைய கருத்துகள், துரதிர்ஷ்டவசமானது, கீழ்த்தரமானது. வாக்குகளுக்காக சிறந்த தலைவர்களை விமர்சிக்காதீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது’’ என்றார்.

The post என் உடல்நிலை பற்றி பொய் பரப்பும் பாஜ: ஒடிசா முதல்வர் பட்நாயக் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: