கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல்

கொல்கத்தா: வங்கதேச எம்பி அன்வருல்அசீமை அவரது அமெரிக்க நண்பர் ரூ.5கோடி கொடுத்து கொன்றுள்ளதோடு, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த அவாமீ லீக் எம்பி அன்வருல் அசிம் அனார் கடந்த 13ம் தேதி மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை மாநில சிஐடி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனார் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆனால் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதல் கட்ட விசாரணையில், எம்பி அன்வருல் அசீம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.அவரது நெருங்கிய நண்பரான அமெரிக்காவை சேர்ந்தவர் ரூ.5கோடி கொடுத்து எம்பியை கொலை செய்ய கூறியதாக சந்தேகிக்கப்படுகின்றது. கடைசியாக அன்வருல் சென்ற நண்பரின் குடியிருப்பில் ரத்த கறைகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்பி உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை வெவ்வேறு இடங்களில் வீசுவதற்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி இருக்கலாம். ப்ரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த சில பிளாஸ்டிக் பைகளில் இருந்த உடல் பாகங்கள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.

The post கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: