ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும் நடவடிக்கை ரயில்வே போலீஸ் டிஎஸ்பி எச்சரிக்கை காட்பாடி ரயில் நிலையத்தில் ஆலோசனை

வேலூர், மே 19: ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காட்பாடி ரயில் நிலையத்தில், நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பெரியசாமி எச்சரித்துள்ளார். சமீப காலமாக பயணிகள் ரயில்கள் மீது கல்லெறிவது, தண்டவாளத்தில் கற்களை வைப்பது, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா உட்பட போதை பொருள் கடத்தல், போதையில் தண்டவாளத்தில் விழுந்து இறப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுப்பது தொடர்பாக ஒவ்வொரு ரயில்வே போலீஸ் நிலையத்திலும் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டிஎஸ்பி பெரியசாமி பேசியதாவது: ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்புப்படையுடன் இணைந்து இருப்புப்பாதைகளில் ரோந்து மேற்கொள்ளுதல், பயணிகள் பெட்டிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், ரயில்கள் மற்றும் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், இருப்புப்பாதை ஓரங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தால் அங்கு போதை ஆசாமிகள் இருப்புப்பாதை அருகில் வராமல் இருப்பதை தடுப்பது குறித்த நடவடிக்கையை உள்ளூர் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ளுதல், கஞ்சா, மதுபாட்டில், குட்கா, சாராயம் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பது, ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது போன்றவற்றில் தீவிரம் காட்ட வேண்டும்.

மேலும் ரயில் பயணிகள் மத்தியிலும், ரயில் நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியிலும் குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த ஆய்வுக்கூட்டம் ரயில்கள் மீது கல்லெறிபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது என்பதற்காக கூட்டப்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவாந்திகா தலைமையில், எஸ்எஸ்ஐக்கள் முரளிமனோகரன், சுப்பிரமணி, ரயில்வே பாதுகாப்புப்படையை சேர்ந்த ஏஎஸ்சி பி.ராமமூர்த்தி, ஏஎஸ்ஐ முரளிதரன், காவலர்கள் அழகர்சாமி, மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும் நடவடிக்கை ரயில்வே போலீஸ் டிஎஸ்பி எச்சரிக்கை காட்பாடி ரயில் நிலையத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: