இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய தான் பாஜ 400 கேட்கிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடல்

லக்னோ: இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதால் தான் மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ விரும்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் கெஜ்ரிவால்,‘‘பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் மிகப்பெரிய காரியத்தை செய்யப்போகிறது என்று கூறுகிறார்கள். இட ஒதுக்கீட்டை நிறுத்துவதே அவர்கள் செய்ய விரும்பும் மிகப்பெரிய காரியமாகும். ஆர்எஸ்எஸ்- பாஜ எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவார்கள் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள். நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். இட ஒதுக்கீட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக தான் மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு 75வயதை கடக்க உள்ளதால் அவர் பதவியில் இருந்து விலகி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமராக்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதனை உறுதி செய்வதற்காக தான் பணியாற்றி வருகிறார்” என்று தெரிவித்தார்.

மாலிவால் விவகாரம் கெஜ்ரிவால் மறுப்பு
செய்தியாளர்கள் ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்தார். இதனிடையே மைக்கை வாங்கிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், அதனை விட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கிறது. பாஜ பொய் வழக்கு போடும் கும்பல் என்றார்.

2 மாதத்தில் உ.பி. முதல்வர் யோகி நீக்கம்
உத்தரப்பிரதேசத்தில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ‘‘மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் நீக்கப்படுவார். என்று தெரிவித்தார். அமித் ஷாவின் வழியில் இடையூறாக இருப்பவர் ஒரே நபர் மட்டுமே. அவர் தான் ஆதித்யநாத். எனவே அவர்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால் இரண்டே மாதங்களில் ஆதித்யநாத்தை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

The post இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய தான் பாஜ 400 கேட்கிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: