அரசூரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழிபாட்டுப் பயிற்சி முகாம்

சூலூர்,மே16: கோவை மாவட்டம் சூலூர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கின்ற ஆலய வழிபாட்டு பயிற்சி தமிழ்நாடு பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி புரட்சித் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் திருக்கோவில்களில் வழிபாட்டு நெறிமுறைகள்படி சிறப்பாகப் பணியாற்ற வழிவகை செய்யும் வகையில்,11-வது ஆலய வழிபாட்டுப் பயிற்சி முகாம் சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் சூலூரில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் அரசூர் தங்கநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் இப்பயிற்சி கடந்த 5ம் தேதி துவங்கி வருகிற 17ம்தேதி வரை நடைபெற உள்ளது.இதில் 120 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெண் பூசாரிகள் தவிர எஞ்சியுள்ளவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சியும் தீட்சை அளிக்கும் நிகழ்ச்சியும் நேற்று காலை நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு பண்ணவாடி ஆதீனம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிகள் பூநூல் அணிவித்து தீட்சை வழங்கினார்.

பயிற்சி முகாமில் கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பூசாரிகள் ஓய்வூதிய தேர்வுக்குழு உறுப்பினர் பி.வாசு பூசாரி கூறுகையில்: கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆலய வழிபாட்டுப் பயிற்சி முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறது.
கிராமப்புறங்களைச் சேர்ந்த கோவில் பூசாரிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று பலனடைந்து வருகின்றனர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் அடியொற்றி நாங்கள் மேற்கொண்டுவரும் சிறு முயற்சியே இந்த ஆலய வழிபாட்டுப் பயிற்சி முகாம் ஆகும்.

கிராமப்புற கோவில் பூசாரிகள் 12 நாள்களிலேயே ஆலய வழிபாட்டு முறைகளை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த பயிற்சி முகாம் ஒரு எடுத்துக்காட்டு. மேலும் 15 பெண் பூசாரிகளும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் முதன்முறையாக பெண் ஓதுவார்களை நியமித்திருப்பதே எங்கள் முயற்சிக்கு முன்னோடியாக அமைந்தது.அரசூர் தங்கநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்துவரும் ஆலய வழிபாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணாக்கர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.முதல்வருக்கும்,அமைச்சருக்கும் கோவில் பூசாரிகள் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசூரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழிபாட்டுப் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: