மோடியும், ஒடிசா முதல்வரும் நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு


புதுடெல்லி: ‘பிரதமர் மோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது. 2 நாள் பிரசாரமாக ஒடிசா சென்றுள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு பிரசாரத்திலும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நவீன் பட்நாயக்கும், நரேந்திர மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பிஜூ ஜனதா தளம் உடனான தனது கட்சியின் உறவு குறித்து பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்? ஒடிசாவில் எதிர்க்கட்சியாக இருப்பதாக பாஜ கூறினாலும், இரு கட்சிகளும் பல சமயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் பிஜூ ஜனதா தள எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட சர்ச்சைக்குரிய எந்தவொரு மசோவிலும் இக்கட்டான தருணத்தில் ஒன்றிய பாஜ அரசுக்கு கைகொடுத்துள்ளது. மாநிலங்களவை எம்பியாக அஸ்வினி வைஷ்ணவுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத சமயத்தில் பிஜூ ஜனதா தளம் உதவி உள்ளது. இதற்கு கைமாறாக மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் கொடுமையிலிருந்து ஒடிசாவிற்கு விலக்கு அளித்துள்ளது பாஜ. அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து ஒடிசா அரசை மிரட்டவில்லை. மற்ற மாநிலங்களைப் போல் ஆளுநரை வைத்தும் அரசு நிர்வாகத்தில் தலையிடவில்லை. தனது கட்சியை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்து, ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மாநில மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பாரா? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

The post மோடியும், ஒடிசா முதல்வரும் நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: