400 சீட் எல்லாம் வாய்ப்பே இல்லை: 150 இடங்களை கூட பா.ஜ தாண்டாது; அடித்துச் சொல்கிறார் ராகுல்காந்தி

அலிராஜ்பூர்: மக்களவை தேர்தலில் பா.ஜ 150 இடங்களை கூட தாண்டாது என்று ராகுல்காந்தி உறுதிபடத்தெரிவித்து உள்ளார். மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்தநிலையில் மத்தியபிரதேச மாநில அலிராஜ்பூர் மாவட்டத்தில் நேற்று பிரசார கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: பாஜ தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்கள் அதற்காகத்தான் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற முழக்கத்தைக் கொடுத்துள்ளனர். 400ஐ விட்டுவிடுங்கள், அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது. இந்த மக்களவைத் தேர்தல் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காகவே நடக்கிறது. பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல்சட்டத்தை துண்டாடவும், மாற்றவும், தூக்கி எறியவும் விரும்புகின்றன. காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கின்றன.

பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசிகள் பலன்களைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் காரணமாகும். அரசியலமைப்பின் காரணமாக பழங்குடியினருக்கு தண்ணீர், நிலம் மற்றும் காடுகளின் மீது உரிமை உள்ளது. மோடி மக்களின் உரிமைகளை பறிக்க நினைக்கிறார். நாங்கள் அதை தடுத்து நிறுத்த விரும்புகிறோம். பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைப் பறிப்போம் என்று பாஜ தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இடஒதுக்கீட்டைப் 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப் போகிறோம். பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசியினருக்கு அவர்களின் தேவைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு பாடுபடும்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பழங்குடியினர், தலித்துகள், ஓபிசி மற்றும் பொது சாதிகளில் இருந்து ஏழைகளின் மேம்பாட்டிற்காக பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இது நாங்கள் செய்யப்போகும் புரட்சிகரமான பணி. மோடி 22 கோடீஸ்வர தொழிலதிபர்களுக்காக மட்டுமே அக்கறை காட்டுகிறார். அவர்களின் லட்சக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால் பழங்குடியினர், தலித்கள், ஓபிசிகள் மற்றும் பொது சாதிகளில் உள்ள ஏழைகளின் முன்னேற்றம் குறித்து இந்தியா கூட்டணி சிந்திக்கிறது. பிரதமர் மோடி தனது அரசு மூலம் ஆண்டுதோறும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக பொய் கூறினார். ஆனால் தற்போது நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* ஊரக வேலை சம்பளம் ரூ.250ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும்
ராகுல்காந்தி பேசுகையில்,’ இந்தியா கூட்டணி மத்தியில் கட்சி ஆட்சி அமைந்தவுடன் மகாத்மாகாந்தி கிராமப்புற ஊரக வேலை திட்டத்தின் கீழ் தினசரி சம்பளம் 250 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்படும். விவசாயிகளின் கடன்கள் உடனே தள்ளுபடி செய்யப்படும்’ என்றார்.

The post 400 சீட் எல்லாம் வாய்ப்பே இல்லை: 150 இடங்களை கூட பா.ஜ தாண்டாது; அடித்துச் சொல்கிறார் ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Related Stories: