18வது மக்களவை தேர்தல்; நாடு முழுவதும் ரூ.8,889 கோடி பறிமுதல்: ரூ.3,959 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை ரூ.8,889 கோடி மதிப்பிலான போதைப்பொருள், மதுபானம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய நிலையில் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள், மதுபானம் போன்றவற்றை விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றை கண்காணிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருள்கள், மதுபானம், போதைப்பொருள் விவரங்களை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ளது. அதன்படி, “ரூ.849.15 கோடி ரொக்கப் பணம், ரூ.814.85 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.3,958.85 கோடி மதிப்பில் போதைப்பொருள்கள், ரூ.1,260.33 கோடி மதிப்பில் விலை மதிப்பற்ற உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 45 சதவீதம் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக குஜராத்தில் மூன்றே நாட்களில் ரூ.892 கோடி மதிப்பில் உயர்ரக போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 18வது மக்களவை தேர்தல்; நாடு முழுவதும் ரூ.8,889 கோடி பறிமுதல்: ரூ.3,959 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: