காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை பருவத்தின்போது எள், நிலக்கடலை, பயிர் வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு திட்டம்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம், ஏப்.25: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள், நிலக்கடலை மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கான சிறப்பு திட்டம் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப்பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் எள், உளுந்து, பாசிப்பயறு மற்றும் மணிலா போன்ற குறைந்த கால பயிர்களை கோடைப்பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பாக நிலத்தில் கோடை உழவு செய்யவும் விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.கோடை உழவு செய்வதனால் விவசாய நிலங்களில் உள்ள பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் அழிக்கப்படுவதோடு மண்ணின் அடியில் உள்ள களை விதைகள் மற்றும் தீமை செய்யும் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகவோ அல்லது வெயிலின் தாக்கத்தினால் காய்ந்தோ அழிந்து விடும். மேலும், கோடை மழை பெய்யும்போது மழைநீர் தேங்குவதனால் மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து இலகுவாகி எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.

பயிரிடும்போது அதன் வேர்கள் எளிதாக மண்ணில் பரவி செழிப்பாக வளரும். இவ்வாறு கோடை உழவு செய்வதன் மூலமாக அடுத்த சாகுபடிக்கான உரத் தேவை குறையும், நீர் நிலத்தில் தக்க வைக்கப்படும், பூச்சி – பூஞ்சாண தொல்லைகள் குறையும், களைகள் கட்டுப்படுத்தப்படும், மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். கோடையில் மாற்றுப்பயிராக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து (N) சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இதேபோல் குறைந்த வயதில் அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக் கூடிய எள் பயிரினையும் கோடையில் சாகுபடி செய்யலாம்.

எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானது ஆகும். எள் பயிரானது அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. நிலக்கடலை பயிரினை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிகலாபம் ஈட்டலாம். மேற்கண்ட அனைத்து பயன்களையும் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாயிகளும் நடப்பு கோடைப் பருவத்தில் மேற்கண்ட குறுகிய கால மற்றும் மண் வளம் காக்கும் பயிர்களை பயிரிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட பயிர் சாகுபடிக்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகிய பயிர்களுக்கான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் தற்சமயம் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் அவற்றை 50 சதவீதம் மானியத்தில் பெற்று பயன்பெறலாம்.

நிலக்கடலை விதைகள் இம்மாத இறுதிக்குள்ளும் எள் விதைகளும் எதிர்வரும் மே மாத இறுதிக்குள்ளும் அனைத்து வட்டார, துணை வட்டார விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்படும். மேலும் மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும். உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மாவிரிடி ஆகிய இடுபொருட்களையும் அனைத்து வேளாண் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

இதுதவிர இத்திட்டத்தின் கீழ் கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின், ‘மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ள பசுந்தாள் உர விதை விநியோகத்திலும் முன்னுரிமை வழங்கப்படும். கோடைப்பயிர் சாகுபடிக்கு பிந்தைய நாட்களில் பசுந்தாள் உர விதைகளை விதைத்து 45 நாட்களில் (அதாவது பூ பூக்கும் பருவத்தில்) மடக்கி உழுவதன் மூலமாக தழைச்சத்தானது மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு மண்ணின் தரம் மேம்படுத்தப்படுகிறது. மண்ணிலுள்ள கரிமச்சத்தின் அளவும் படிப்படியாக அதிகரித்து மண்ணின் வளம் பேணப்படுகிறது.

எனவே, திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறவும், மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நிலக்கடலை விதைகள் இம்மாத இறுதிக்குள்ளும் எள் விதைகள் வரும் மே மாத இறுதிக்குள்ளும் அனைத்து வட்டார, துணை வட்டார விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்படும். மேலும் மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை பருவத்தின்போது எள், நிலக்கடலை, பயிர் வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு திட்டம்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: